Home One Line P2 ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் பெர்சாத்துவிலிருந்து நீக்கம்

ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் பெர்சாத்துவிலிருந்து நீக்கம்

535
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜோகூர் மாநிலத்தின் ஶ்ரீ காடிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டத்தோ ஷாருடின் முகமட் சாலே (படம்) பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தரப்பில் அமர மறுத்து நாடாளுமன்ற அலுவலகத்திற்கு அவர் தெரியப்படுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்தே அவர் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

பெர்சாத்து தலைவரும் பிரதமருமான டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அணியில் நாடாளுமன்றத்தில் அமர விரும்பவில்லை என ஷாருடின், நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு கடந்த ஜூலை 10-ஆம் தேதி கடிதம் மூலம் தனது முடிவைத் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் பெர்சாத்து தலைமைச் செயலாளர் டத்தோ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அவர் இதுவரையில் கட்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்கு பெர்சாத்து நன்றி தெரிவிக்கிறது” என ஹம்சா அறிக்கை ஒன்றின் வழி இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) தெரிவித்தார்.

துன் மகாதீரின் ஆதரவாளராகப் பார்க்கப்படும் ஷாருடின் கடந்த ஜூன் மாதத்தில் தனது தனது துணையமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பொதுப் பணித்துறையின் துணை அமைச்சராக அவர் பதவி வகித்து வந்தார்.

பெர்சாத்துவுக்கு எதிராகத் தொடங்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர்களின் கட்சியின் நற்பெயரைக் குலைக்கும் பிரச்சாரங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்றும் பெர்சாத்து உறுப்பினர்களை ஹம்சா தனது அறிக்கையில் எச்சரித்தார்.

கட்சியின் சட்டவிதிகளை மீறியவர்களுக்கு எதிராகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹம்சா கூறினார்.

தேசியக் கூட்டணி தற்போது நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. எதிர்கட்சியினர் 109 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றனர்.

இதில் துன் மகாதீர் உள்ளிட்ட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கூட்டணியில் இணையாமல், கடந்த மே 18 நாடாளுமன்றக் கூட்டத்தில், எதிரணியிலேயே செயல்பட்ட காரணத்தால் பெர்சாத்துவிலிருந்து நீக்கப்பட்டனர்.

துணையமைச்சர் பதவியிலிருந்து விலகியவர்

பொதுப் பணித் துறை துணை அமைச்சர் பணியாற்றி வந்த ஷாருடின் முகமட் சாலே கடந்த ஜூன் 4-ஆம் தேதி பதவி விலகினார்.

ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தேசிய கூட்டணியில் சேருவதன் மூலம் ஓர் அரசியல் தவறைச் செய்ததாகக் கூறிய ஓர் ஊடக அறிக்கையைத் தொடர்ந்து அவரது பதவி விலகல் குறித்த ஊகங்கள் கிளம்பின.

“ஸ்ரீ காடிங் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் இடைத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு நான் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். இந்த பிழையைச் சரிசெய்வதற்கான முதல் படியாக, தேசிய கூட்டணியின் பிரதமரால் இந்த பதவிக்கு நான் நியமிக்கப்பட்டதால், நான் பதவி விலகுகிறேன்.” என்று அவர் ஒர் அறிக்கையில் அப்போது தெரிவித்தார்.

பொதுப் பணித்துறை துணை அமைச்சர் பதவியிலிருந்து விலகியதற்கு அடுத்த நாள் ஷாருடின் சாலே, தாம் இன்னும் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக கூறினார்.

ஆயினும், இடையில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை சந்தித்தது குறித்த புகைப்படத்தினை, மகாதீர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கடந்த ஜூலை 13-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது பெர்சாத்து தலைவரும் பிரதமருமான டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அணியில் நாடாளுமன்றத்தில் அமர விரும்பவில்லை என ஷாருடின், நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு கடந்த ஜூலை 10-ஆம் தேதி கடிதம் மூலம் தனது முடிவைத் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்தே அவர் தற்போது பெர்சாத்து கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.