ஜோர்ஜ் டவுன்: சமூக ஆர்வலர் கே.சுதாகரன் ஸ்டான்லி சிங் திங்கட்கிழமை இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று ஷா அலாமில், சீர்குலைக்கப்பட்ட சுவரோவியம் குறித்து சுதாகரன் எழுதிய முகநூல் பதிவுக் காரணமாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு இரவு 10 மணியளவில் ஜெலுத்தோங்கில் உள்ள அவர்களது வீட்டிற்கு காவல் துறை அதிகாரிகள் வந்ததாக அவரது மனைவி அலிசியா சுதாகரன் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் கதவைத் தட்டினர். ஜோர்ஜ் டவுன் காவல் துறை தலைமையகத்திற்கு அவர்களைப் பின்தொடரச் சொன்னார்கள்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
எவ்வாறாயினும், அவரது கணவரை காவல் துறையினர் காவலில் எடுத்தபோது கைவிலங்கை அணிவிக்கவில்லை என்று அலிசியா கூறினார்.
1948- ஆம் ஆண்டு தேசத் துரோகச் சட்டம் , தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (பி) மற்றும் தகவல்தொடர்பு, பல்லூடகச் சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் சுதாகரன் விசாரிக்கப்படுவார் என்று புக்கிட் அமான் துணை இயக்குநர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.