கோலாலம்பூர்: இனிமேல் எச்சரிக்கைகள், ஆலோசனைகள் வழங்கப்பட மாட்டாது.
மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியவர்கள் மீது காவல் துறை உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு ஆணை முடிந்து விட்டது என்றும் அவர்கள் மீது மேலும் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். சமூகத்தில் அதிகரித்து வரும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை மீறுவதற்கு இதுவே காரணம் என்று அமைச்சர் கூறினார்.
முன்னதாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவுறுத்தல்களை மீறியதற்காக 80 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.
அந்த எண்ணிக்கையில், மொத்தம் 20 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படியாத 37 குற்றங்கள் மதுபான விடுதிகள் அல்லது இரவு விடுதிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
கூடல் இடைவெளிக் காரணமாக 43 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“இரவு விடுதி மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் இன்னும் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளின் பட்டியலில் உள்ளன. வீட்டுவசதி, ஊராட்சி அமைச்சு மற்றும் உள்ளூர் அதிகாரிகள், நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலத்தில் செயல்படும் இரவு விடுதிகள், பொழுதுபோக்கு மையங்களில் கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்தை அதிகரிக்கும்.
“வணிக உரிமங்களை இடைநிறுத்தும் நடவடிக்கை இதில் அடங்கும். ”என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.