கோலாலம்பூர்: ஜசெக மலாய்க்காரர்களை அழித்துவிடும் என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின் போது, எதிர்க்கட்சியாக இருந்த நஜிப் ரசாக் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இது நடத்தப்பட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்கம் அமைத்ததும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை புதிய சட்டத்துறைத் தலைவர் நீக்கி விடுவார் என்ற எண்ணம் நஜிப்பிற்கு இருந்ததாக இன்றைய நாடாளுமன்ற உரையில் மகாதீர் குறிப்பிட்டார்.
மீண்டும் அரசாங்கம் அமைப்பதற்காக, ஜசெக மலாய்க்காரர்களை அழித்துவிடும் என்ற குற்றச்சாட்டை நஜிப் சுமத்தியதாக துன் மகாதீர் கூறினார்.
“இது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. மலாய்க்காரர்களை பயமுறுத்தும் குற்றச்சாட்டு. அப்போதுதான் மலாய்க்காரர்கள் நம்பிக்கைக் கூட்டணியை வெறுத்து ஒதுக்குவார்கள்
“உண்மையில் ஜசெக மலாய்க்காரர்களை அழிக்க முடியாது” என்று அவர் கூறினார்.
ஜசெக நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் ஓர் அங்கமாக இருந்தது. மேலும், அதனுடன், பிகேஆர், அமானா மற்றும் பெர்சாத்து கட்சிகள் ஆட்சியில் இருந்தன.
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ஜசெக அரசாங்கத்தை ஆளுகிறது என்றும், மலாய்க்காரர்கள், இஸ்லாமிய மதம் ஆபத்தில் இருப்பதாகவும் இவர்கள் கூறினார்கள். மகாதீர் அவர்களின் பொம்மை என்றும் குற்றம் சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டை பலமுறை மகாதீர் மறுத்து வந்தார்.
நம்பிக்கைக் கூட்டணி காலத்தில் உள்துறை அமைச்சராக மொகிதின் யாசின் இருந்தார். ஜசெகவினால் ஆபத்து என்றால், அவர் அதனை எளிய முறையில் அக்கட்சியின் பதிவை இரத்து செய்திருக்கலாம் என்று மகாதீர் கூறினார்.
“உள்துறை அமைச்சருக்கு தெரியும். சங்கப் பதிவகத்தில் ஜசெகவின் பதிவை இரத்து செய்தால், அதனால் ஒன்றும் செய்ய இயலாது என்று. ஜசெக காணாமல் போய்விடும்.
“இரத்து செய்ய வேண்டியதுதானே?” என்று அவர் குறிப்பிட்டார்.