கோலாலம்பூர்: மொகிதின் யாசினின் குரலுக்கு ஒத்ததாக இருக்கும் குரல் பதிவு குறித்த ஆரம்ப அறிக்கையை எம்ஏசிசி சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்அமைச்சர் பதவி அல்லது அரசாங்க நிறுவனங்களில் பதவியை வழங்கினால் பெர்சாத்துவுடன் இணைவதற்கு ஈர்க்க முடியும் என்று அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய எம்ஏசிசி ஆணையர், அசாம் பாக்கி, இந்த விவகாரம் சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், மேலும் அறிவுறுத்தல்களுக்கு காத்திருப்பதாகவும் கூறினார்.
மொகிதின் யாசின் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்று கேட்டபோது, மேலும் கருத்து தெரிவிக்க அசாம் மறுத்துவிட்டார்.
“இது சட்டத்துறைத் தலைவர் அறிவுறுத்தல்களைப் பொறுத்தது. நாங்கள் விசாரணையை நடத்தியுள்ளோம்.
“இந்த விசாரணையைப் பொறுத்தவரை, நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் அதன் (பதிவின்) அசல் தன்மை
“இரண்டாவதாக, அது தவறா இல்லையா என்று கண்டறிவது” என்று அவர் கூறினார்.
மே 30 அன்று, டாக்டர் மகாதீர் முகமட்டை ஆதரிக்கும் முகநூல் பக்கம் ஒன்று மொகிதினின் குரலுக்கு ஒத்த பதிவு ஒன்றைப் பதிவேற்றியது.
அந்த பதிவில், அமைச்சரவை மற்றும் அரசாங்க நிறுவனங்களில் அம்னோ தலைவர்களுக்கு பதவிகளை வழங்க மொகிதின் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
டாக்டர் மகாதீர் பிரதமர் மற்றும் பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு ஒரு நாள் முன்னதாக, பிப்ரவரி 23 அன்று பெர்சாத்து உச்சமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.