Home One Line P1 1எம்டிபி: கோல்ட்மேன் சாச்ஸ் 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தும்

1எம்டிபி: கோல்ட்மேன் சாச்ஸ் 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தும்

564
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோல்ட்மேன் சாச்ஸ், நிதி நிறுவனம் 1எம்டிபிக்கு மூன்று பரிவர்த்தனைகள் தொடர்பான நிலுவையில் உள்ள உரிமைகோரல்களைத் தீர்க்க, 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை (19 பில்லியன் ரிங்கிட்) செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

2.5 பில்லியன் அமெரிக்க டாலர் பணமாகவும், 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளாகவும் திருப்பித் தருவது இதில் அடங்கும்.

இந்த தொகையானது, சம்பந்தப்பட்ட வங்கியால் கையாளப்பட்ட மூன்று முறைக்கேடான பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்டது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

” 2019- ஆம் ஆண்டில் கோல்ட்மேன் சாச்ஸ் அரசாங்கத்திற்கு வழங்கிய 1.75 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இதுவாகும்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1எம்டிபியை மோசடி செய்யும் திட்டத்தில் கோல்ட்மேன் சாச்ஸின் முன்னாள் ஊழியர்கள் இருவரின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த நிதிகள் மீண்டும் திரும்பப் பெறப்படுகிறது என்று அமைச்சு தெரிவித்தது.

“1எம்டிபி ஊழலில் ஜோ லோ மற்றும் பிற நபர்களுக்கு எதிரான மலேசியாவின் வழக்கை இந்த தீர்வு பாதிக்காது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த தீர்வு அறிவிப்பை பிரதமர் மொகிதின் யாசின் வரவேற்றுள்ளார்.

இந்த தீர்வின் மூலம், மலேசியாவிற்கு திருப்பித் தரப்பட்ட மொத்தம் 1எம்டிபி நிதி 19 ரிங்கிட் பில்லியன் (4.5 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும் என்று பிரதமர் கூறினார்.

“1எம்டிபி தொடர்பான பிற சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளைத் தொடரவும், 1எம்டிபி மோசடி ஊழல் தொடர்பான தனிநபர்கள் மற்றும் கட்சிகளுக்கு எதிரான உரிமைகோரல்களைத் தொடரவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” என்று அவர் விளக்கினார்.

முந்தைய நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின் போது, 1எம்டிபி ஊழல் தொடர்பாக கோல்ட்மேன் சாச்ஸிடமிருந்து இழப்பீடு பெறுவதை மலேசியா நிராகரித்திருந்தது. அந்நிறுவனம் தர ஒப்புக்கொண்ட தொகையானது அப்போது மிகக் குறைவானது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்திருந்தார்.

7.5 பில்லியன் அமெரிக்க டாலர் (31.16 பில்லியன் ரிங்கிட்) அரசாங்கத்தால் ஏற்பட்ட இழப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​நியூயார்க்கை தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கி வழங்கும் இழப்பீடு போதுமானதாக இல்லை என்று அவர் கூறியிருந்தார்.