கோலாலம்பூர்: திங்கட்கிழமை மக்களவையில் மீண்டும் அமளி ஏற்பட்டது. கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு தனது உரையின் போது மலாய் மேலாதிக்கத்தையும், ஊழலையும் பற்றி பேசினார்.
ஒரு குறிப்பிட்ட இனம் வரம்பில்லாமல் வெற்றிபெறும் போது, அமெரிக்காவுடன் இணையாக வரும்போது அது எவ்வாறு ஆபத்தானது என்பதைப் பற்றி பேசியபோது பிரச்சனைத் தொடங்கியது.
“அமெரிக்காவில் நடந்த வெள்ளை மேலாதிக்க பிரச்சனை சிறந்த எடுத்துக்காட்டு. இது ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் (ஆபிரகாம்) லிங்கன் காலத்தில் தொடங்கியது. ஆனால், டொனால்டு டிரம்பின் காலத்தில் உச்சமடைந்துள்ளது. ஏனெனில், அவரது நிர்வாகமானது இனப் பிரச்சனைகளைத் தூண்டுவதற்கு காரணமாக இருந்தது.
“பின்னர் முழு அமெரிக்காவிலும் குழப்பம் ஏற்பட்டது.” என்று முகமட் சாபு கூறினார்.
வெள்ளை மேலாதிக்கத்தின் கருத்தானது, மலாய் மேலாதிக்கத்திற்கு சமம் என்று முகமட் சாபு கூறினார்.
“நாம் இப்போது ஆபத்தைக் காணவில்லை. இது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. அமெரிக்காவில் என்ன நடந்தது என்பது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வெளிப்பட்டது. இறுதியாக, வெள்ளை மேலாதிக்கமானது உலகம் முழுவதும் பரவி முடிவில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காண்கிறோம். ”
முன்னாள் தற்காப்பு அமைச்சர் வெள்ளை மேலாதிக்கமும், மலாய் மேலாதிக்கமும் வெவ்வேறு சொற்றொடர்கள் என்பதால் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் என்று பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் பாட்லி ஷாரி எழுந்து குறுக்கிட்டார்.
“மலாய் மேலாதிக்கம் என்பது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள உரிமைகள் பற்றியது, அதைத்தவிர வேறு எதுவும் இல்லை. ”என்று அவர் கூறினார்.
அகமட்டுடன் உடன்படுவதாகக் கூறிய முகமட் சாபு, முஸ்லிம் தலைவர்கள் ஊழலில் சிக்கியிருந்தால் அவர்களை ஆதரிக்கக் கூடாது என்று கூறினார்.
முஸ்லிம்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் நேர்மையுடன் ஆதரவை வழங்க வேண்டும் என்றும், ஊழல் நிறைந்த முஸ்லிம் தலைவர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
முகமட் சாபுவின் கருத்துகள் பொதுவானவை என்று டான்ஸ்ரீ நோ ஒமர் மறுத்தார். ஊழல் மற்றும் மலாய்க்காரர்களின் கருத்துக்கள் மிகவும் பொதுவானவை என்று தங்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
“நான் ஒரு மலாய்க்காரர் என்பதால் வருத்தப்படுகிறேன். மலாய் உரிமைகளுக்கான போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன், ஆனால் அவற்றை ஊழலுடன் தொடர்புபடுத்துவது மிகவும் பொதுவானது.
“நீங்கள் உண்மையிலேயே மலாய்க்காரர்களுக்காகவும், இஸ்லாமிற்காகவும் போராடுகிறீர்கள் என்றால், நீங்கள் ஏன் பாஸ் கட்சியிலிருந்து அமானாவுக்கு சென்றீர்கள்? பாஸ் இஸ்லாத்திற்காக போராடுகிறது, என்ன வித்தியாசம் உள்ளது?
“இங்கே யார் ஊழல் செய்கிறார்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா? பொதுவாக பேச வேண்டாம். மாண்புமிகு அவர்களே நீங்கள் ஒரு மலாய்க்காரர், மலாய்க்காரர்களை அவமதிக்க வேண்டாம்.
“நம் இனத்தை அவமதிக்க வேண்டாம், ”என்று நோ ஒமர் கூறினார்.
முகமட்டின் கருத்துக்களை ஆதரிப்பதாகக் கூறிய நோ ஒமர், ஆனால் ஊழலை மலாய்க்காரர்களுடன் தொடர்புப் படுத்தப்படக்கூடாது என்று கூறினார்.