புது டில்லி: இந்தியாவில் நாடு முழுவதும் கொவிட்19 தொற்று எண்ணிக்கை 15 இலட்சத்தினை கடந்துள்ளது.
இந்நிலையில், தற்போது மேலும் சில தளர்வுகளை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த செயல்முறையின் மூன்றாம் கட்ட அறிவிப்பினை மத்திய அரசு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
இதில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த இரவு நேர ஊரடங்கு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு மண்டலங்களில் இல்லாத உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா நிலையங்களை திறக்க ஆகஸ்ட் 5 முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், மதுபான விடுதிகள் மற்றும் திரையரங்குகள் போன்றவற்றிற்கு ஆகஸ்ட் 31 வரையில் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ போக்குவரத்து மற்றும் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மையில், தளர்வுகளை அறிவித்ததை அடுத்து இந்தியாவில் தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. தற்போது, மீண்டும் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் தொற்று எண்ணிக்கைகள் அதிகரிக்குமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.