உலகின் பணக்கார நாடாகவும், செல்வச் செழிப்பு மிக்க கோடீஸ்வரர்களை அதிகமாகக் கொண்ட நாடாகவும் அமெரிக்காதான் எப்போதும் திகழ்ந்து வந்திருக்கின்றது. ஆனால் அண்மையக் காலங்களில் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசியா நாடுகளின் அபரிதமான வளர்ச்சியால் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அமெரிக்காவை விட ஆசியாவில் அதிகம் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகமான பணத்தை சேமிப்பாகவும், முதலீடுகளுக்காகவும் வைத்துள்ள பணக்காரர்களில் 3.37 மில்லியன் மக்கள் ஆசிய பசிபிக் நாடுகளில் வாழ்கின்றார்கள் என கனடிய வங்கி ஒன்றின் ஆய்வு கூறுகின்றது.
ஆனால் வட அமெரிக்காவிலோ (கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்) இந்த ரக பணக்காரர்கள் 3.35 மில்லியன் மட்டுமே இருப்பதாக கணக்கெடுப்புகள் காட்டுகின்றன.
ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகமாக பணத்தை வைத்திருக்கும் பணக்காரர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய பிரதேசம் ஐரோப்பா கண்டமாகும். இங்கே இத்தகைய பணக்காரர்கள் 3.17 மில்லியன் பேர் இருக்கின்றார்கள்.
எண்ணிக்கையில் உலகப் பணக்காரர்கள் அதிகமாக இருந்தாலும் சொத்து மதிப்பு என்று வரும்போது அமெரிக்கா பணக்காரர்களின் சொத்து மதிப்புதான் மற்ற எந்த பிரதேசத்தை விடவும் அதிகமாக இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.