கோலாலம்பூர: நேற்று ஞாயிற்றுக்கிழமை 11 புதிய கொவிட்19 சம்பவங்களைப் பதிவு செய்த சிவகங்கா தொற்றுக் குழுவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, கெடா அரசு குறிப்பிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தி உள்ளது.
நான்கு மாவட்டங்களில் இது அமலுக்கு வருகிறது.
இதற்கிடையில், கெடா தேசிய பாதுகாப்பு மன்றம், மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள ஐந்து பள்ளிகளை நேற்று முதல் 28 நாட்களுக்கு மூட உத்தரவிட்டது.
நேற்று பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில் இருவர் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஆவர்.
ஹோஸ்பா இடைநிலைப்பள்ளி , ஹோஸ்பா தேசிய ஆரம்பப் பள்ளி, மெகாட் டேவா இடைநிலைப்பள்ளி , மெகாட் டேவா தேசிய ஆரம்பப்பள்ளி, மற்றும் பாடாங் தெராப்பில் உள்ள குபாங் பாலாஸ் தேசிய ஆரம்பப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
சிவகங்கா தொற்றுக் குழுவில் இதுவரை 20 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது தற்போது நான்காவது பெரிய தொற்றுக் குழுவாக உள்ளது.
கண்காணிப்பில் இருந்த நோயாளியான, ஓர் உணவக உரிமையாளருடன் இந்த தொற்றுக் குழுத் தொடங்கியது. அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிறகு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறினார்.
313 பேர் இது தொடர்பாக பரிசோதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியது, அவர்களில் 280 பேருக்குத் தொற்று ஏற்படவில்லை.