புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 தொற்று எண்ணிக்கை எந்த ஒரு முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றால் புதிதாக 62,538 பேர் பாதிப்படைந்துள்ளனர். இது கடந்த நாட்களில் ஏற்படாத அளவு அதிகமான எண்ணிக்கை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 10 இலட்சத்தை அடைந்த 21 நாட்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இது குறித்து சுகாதார நிபுணர்கள், ஆர்வலர்கள் , பொது மக்கள் என அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 886 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 41,585- ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றால் பாதிப்படைந்தவர்களில் 13.78 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
ஜனவரி 30-ஆம் தேதி கேரளாவில் முதன் முதலாக இந்த தொற்று பதிவானதை அடுத்து 190 நாட்களில் இந்தியாவில் கொவிட்19 தொற்று 20 இலட்சத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை பதிவு செய்த மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா (11,514), ஆந்திரா (10,328), கர்நாடகா (6,805), தமிழகம் (5,684) மற்றும் உத்தரப்பிரதேசம் (4,586) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.