கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,063-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 25 சம்பவங்களில் 9 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். மேலும், 16 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டவர்கள். அவர்களில், 10 பேர் பெர்லிசில் தொற்றுக் கண்டுள்ளார்கள். தலா ஒருவர் கெடா, பினாங்கில் தொற்றுக் கண்டுள்ளனர். இந்த 12 பேரும் சிவகங்கா தொற்றுக் குழுவுடன் சம்பந்தப்பட்டுள்ளான்ர்.
இன்று 15 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,728 -ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் மொத்தம் 210 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் இருவர் அவசரப் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.