Home One Line P2 கோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு

கோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு

1066
0
SHARE
Ad

கோழிக்கோடு (காலிகட் – கேரளா) – நேற்று வெள்ளிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 7) உள்நாட்டு நேரப்படி 7.41 மணியளவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் மாண்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

அந்த விமானத்தின் இரு விமானிகளும் உயிரிழந்தனர். இதன் தொடர்பான மேலும் கூடுதலான செய்திகள் பின்வருமாறு :

  • விமான விபத்துக்கு இந்திய அதிபர், பிரதமர் இருவரும் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
  • கோழிக்கோடு விமான நிலையம் ஒரு மலை முகட்டின் மேல் தட்டையான நிலையில் அமைந்து இருக்கின்றது. இதனை ஆங்கிலத்தில் ‘டேபிள் டாப்’ (Table Top) விமான நிலையம் என்று கூறுகின்றார்கள். அதாவது சமதரையில் இருக்கும் மற்ற விமான நிலையங்களை போலல்லாமல் மலை உச்சியிலும் மலை முகட்டிலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான நிலப்பரப்பிற்குள் அமைந்திருக்கும் விமான நிலையம் இது.
  • இதனால் கடும் மழை போன்ற காலங்களில் விமானிகள் விமானத்தை இத்தகைய விமான நிலையங்களில் தரை இறக்குவதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி இருந்தார்கள் என்று கூறப்படுகின்றது.
  • நேற்று நிகழ்ந்த விபத்தின்போது பணியாளர்கள் உள்ளிட்ட 190 பயணிகள் விமானத்திலிருந்தனர்.
  • விமானத்தின் ஓடுபாதையில் இருந்து சறுக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாகப் பிளந்ததால் பலர் காயமடைந்தனர். உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
  • அந்த விமானம் தரையிறங்கும்போது கடும் மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டது.
  • துபாய் நகரிலிருந்து வந்த அந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியது. அயல் நாடுகளில் கொவிட்-19 பாதிப்புகளால் சிக்கிக் கொண்ட இந்தியர்களை ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தின் கீழ் மீட்டுக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விமானம் துபாய் நகரிலிருந்து கோழிக்கோடுக்கு இந்தியப் பயணிகளை ஏற்றி வந்தது.
  • B-737 இரக விமானமான இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டாகப் பிளந்தது.
  • விமானத்தின் விமானிகள் இருவரும் மரணமடைந்தனர். அவர்கள் நீண்ட கால விமானப் பயண அனுபவத்தைக் கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
  • காயமடைந்த பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றாலும், சிலர் கடுமையான காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.