Home One Line P1 மகாதீர் கட்சியில் சேராத சைட் சாதிக் – அடுத்த நடவடிக்கை என்ன?

மகாதீர் கட்சியில் சேராத சைட் சாதிக் – அடுத்த நடவடிக்கை என்ன?

644
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) துன் மகாதீர் முகமட் அறிவித்த புதிய அரசியல் கட்சியில் முன்னாள் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரகுமான் இணையவில்லை.

அந்தக் கட்சியின் அறிவிப்பு விழாவிலும் சாதிக் காணப்படவில்லை.

மகாதீரின் நெருக்கமான ஆதரவாளராகப் பார்க்கப்பட்ட சைட் சாதிக் தோற்றுவிக்கப்பட்ட புதிய கட்சியில் இணையாமல் ஒதுங்கிவிட்டது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து அவர் எந்த அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை. புதிய கட்சி குறித்த  எந்தக் கருத்தையும் சைட் சாதிக் இதுவரை வெளியிடவில்லை.

துன் மகாதீரும் சைட் சாதிக் ஏன் கட்சியில் இணையவில்லை என்பது குறித்து எதுவும் கூறவில்லை.

துன் மகாதீர் தலைமை வகித்த பெர்சாத்து கட்சியில் சைட் சாதிக் இளைஞரணி தலைவராகச் செயல்பட்டார்.

மகாதீர் அமைச்சரவையில் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற ஆரூடங்களும் எழுந்திருக்கின்றன.

இளைஞர் அமைப்பு தொடங்குகிறாரா சைட் சாதிக்?

சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான்

இதற்கிடையில் இளைஞர்களை மட்டும் மையமாகக் கொண்ட புதிய அரசியல் கட்சி ஒன்றை சைட் சாதிக் தொடங்கி வழிநடத்துவார் என்று ஆருடங்கள் எழுந்துள்ளன. அந்தக் கட்சி 15-ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்ற ஊகமும் நிலவுகிறது.

இதற்கிடையில் சைட் சாதிக்குக்கு நெருக்கமான ஆதரவாளர்கள்  புதிய இளைஞர் இயக்கம் ஒன்றைத் தொடங்குவதில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த இயக்கம் வெறும் சமூக இயக்கமாக இருக்குமா அல்லது அரசியல் இயக்கமாக உருவெடுக்குமா என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த இயக்கத்திற்கு சைட் சாதிக் தலைமை ஏற்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

பெர்சாத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துன் மகாதீர் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் சைட் சாதிக்கும் ஒருவராவார். தனது நீக்கத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டார்.

இந்த வழக்கு மகாதீர் அணியினருக்கு எதிரான தீர்ப்பையே அவர்களுக்கு வழங்கியது.

எனவே, மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புதிய கட்சியை தோற்றுவித்து இருக்கின்றனர். ஆனால் சாதிக் மட்டும் அந்தக் கட்சியின் அறிவிப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் விலகி நின்றார்.

மகாதீர் கட்சியால் பிளவுபடும் பெர்சாத்து

இதற்கிடையில் மகாதீர் தொடங்கிய புதுக் கட்சியில் பலரும் இணைந்து வருகின்றனர்.

டாக்டர் மகாதீர் முகமட் தொடங்கியிருக்கும் புதிய கட்சிக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தான் தலைவராக இருக்கப் போகும் இப்புதிய கட்சிக்கு முக்ரிஸ் மகாதீர் அவைத் தலைவராக இருப்பார் என்றும் மகாதீர் அறிவித்தார்.

இப்புதிய கட்சி எந்தவொரு கூட்டணியுடனும் இணையாது என்றும், ஊழலை ஒழிப்பதற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே ஜெரம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஷாயிட் ரோஸ்லி பெர்சாத்துவிலிருந்து விலகி மகாதீரின் புதிய கட்சியில் இணைவதாக அறிவித்திருக்கின்றார். இவர் பெர்சாத்து கோலசிலாங்கூர் தொகுதியின் தலைவருமாவார். எனினும் தற்போதைக்கு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இயங்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

நாடெங்கிலும் உள்ள பல பெர்சாத்து தொகுதிகள் கலைக்கப்பட்டு மகாதீருக்கு ஆதரவாக இயங்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பெர்சாத்து கிள்ளான் தொகுதியும் அவற்றில் ஒன்றாகும். மேலும் கோத்தா ராஜா தொகுதி, லங்காவி தொகுதி போன்ற தொகுதிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களும், பொறுப்பாளர்களும் பெர்சாத்து கட்சியிலிருந்து விலகும் முடிவை அறிவித்திருக்கின்றனர்.

-இரா.முத்தரசன்