கோலாலம்பூர்- மக்களவையில் புகைப்பிடிப்பது காணொளியில் பதிவானதை அடுத்து தாம் அபராதம் செலுத்தியதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
“நான் அதற்காக அபராதம் செலுத்தினேன். நான் கூறியது போல், தவறு தவறுதான், நான் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டேன்,” என்று அவர் மக்களவையில் வோங் சு குய் (கிள்ளான் நாடாளுமன்றம்) எழுப்பிய கேள்விக்கு பதில் கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல், அனைத்து உணவகங்கள் உட்பட தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடிப்பவர்களுக்கு 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்தத் தவறியவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம். அங்கு அவர்கள் அதிகபட்சமாக 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அமைச்சர் முகமட் ரெட்சுவான் பேசிக்கொண்டிருக்கையில், அதனை குறுக்கிட்டு, கடந்த வாரம் நீதிமன்ற விதி 14 (ஈ) இன் கீழ், தாம் இந்த விஷயத்தை எழுப்பியதாக வோங் கூறினார்.
துணை சபாநாயகர் டத்தோ முகமட் ரஷீத் ஹஸ்னோன், ஹிஷாமுடின் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரியுள்ளதைக் கவனித்து, அமைச்சர் முகமட் ரெட்சுவானை தனது பதில்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.
ஆகஸ்ட் 6- ஆம் தேதி, செம்பெரோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிசாமுடின் முகக்கவசம் அணிந்திருந்தபோது புகைப்பிடித்தது பரவலாக சமூகப் பக்கங்களில் பகிரப்பட்டது.