பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 14- தாம் பிரதமரானதிலிருந்து தம்முடைய அரசு எந்த சமூகத்தினரையும், அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் சரி, எந்த சமயத்தினராக இருந்தாலும் சரி உதாசீனப்படுத்தியதில்லை என்றும் மாறாக சமவாய்ப்புகள் வழங்கியுள்ளதாகவும் நஜிப் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள சீக்கிய குருத்துவாருக்கு விசாக தின கொண்டாட்டத்திற்காக தன் துணைவியார் மற்றும் அமைச்சரவை சகாக்கள் சிலருடன் வருகை புரிந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சீக்கிய சமூகத்தினருக்கு அமைச்சரவை உட்பட பல முக்கிய பதவிகள் தரப்பட்டதும், அதில் அவர்களின் வெற்றியும் அரசு அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு உதாரணமாகும் என்றார்
மேலும் 2008லிருந்து இதுவரை 21 மில்லியன் நிதி ஒதுக்கீடு அரசு சாரா சீக்கிய அமைப்புகளுக்கு ஒதுக்கியிருப்பதைக் குறிப்பிட்ட நஜிப், தான் பதவி ஏற்றதிலிருந்து தானும், தன் அமைச்சரவையும் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய அயராது பாடுபட்டிருப்பதையும், நாடெங்கிலும் மாற்றங்களைக் கொண்டுவரும் நிகழ்வுகள் வெற்றி பெற அவர்களுடைய நம்பிக்கையை பெற்று இணைந்து செயலாற்றி வந்ததையும் குறிப்பிட்டார்.
பிரதமரான பின் இன்று 5ஆவது தடவையாக சீக்கிய சமூகத்தினருடன் விசாக தினத்தைக் கொண்டாடிய நஜிப் 10 அரசு சாரா சீக்கிய அமைப்புகளுக்கு 3.8 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.
தங்களின் ஆழ்ந்த நம்பிக்கையை அவர்களின் பால் நிலைநாட்டியுள்ளதையும் அது என்றென்றும் தொடரும் என தான் நம்புவதாகவும் நஜிப் கூறினார்.
சீக்கிய சமூகத்தினருக்கு தங்கள் அரசால் ஏற்பட்ட வளர்ச்சியும் முன்னேற்றமுமே அவர்கள் தேசிய முன்னணி அரசை ஆதரிக்க முக்கியக்காரணம் என்றும் நஜிக் துன் ரசாக் தெரிவித்தார்.