கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனம் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அண்மையில் தண்டிக்கப்பட்டார்.
குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.
மேல்முறையீட்டு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) தாக்கல் செய்யப்பட்டது.
சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் மேல்முறையீட்டு பிரிவுத் தலைவர் டத்தோ முகமட் துசுகி மொக்தார் கூறுகையில், சிறைத் தண்டனை மற்றும் அபராதம் எதிராக மேல்முறையீட்டை அரசு தரப்பு தாக்கல் செய்ததாகக் கூறினார்.
அரசு தரப்பு மற்றும் தற்காப்பு தரப்பு தங்களது முறையீடுகளை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று (ஆகஸ்ட் 11) என்றும் அவர் கூறினார்.
ஜூலை 28-ஆம் தேதி முடிவு வழங்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட தரப்புகள் தங்கள் மேல்முறையீடுகளை தாக்கல் செய்ய 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஜூலை 28 அன்று, அதிகார அத்துமீறல், மூன்று நம்பிக்கை மோசடி மற்றும் பண மோசடி ஆகியவற்றில் நஜிப் தண்டிக்கப்பட்டார்..
நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் அபராதமும் விதித்தார்.
நஜிப் தற்போது இரண்டு உத்தரவாதங்களுடன் 2 மில்லியன் ரிங்கிட் பிணையில் வெளியே உள்ளார்.
ஜூலை 30-ஆம் தேதி, நஜிப் தனது தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக மேல்முறையீட்டைத் தாக்கல் செய்தார்.