புது டில்லி: கொவிட்-19 தொற்றுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் மூன்று தடுப்பூசிகள் வெவ்வேறு சோதனை நிலைகளில் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.
ஒவ்வொரு இந்தியருக்கும் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படுவதை தனது அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இந்தியாவின் 73-வது சுதந்திர தினக் கொண்டாட்ட விழாவின் போது உரையாற்றிய பிரதமர் மோடி, கொவிட்-19 தடுப்பூசி தயாரிப்பதற்கான வரைத் திட்டம் மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் குறைந்த நேரத்தில் அதன் நியாயமான விநியோகம் தயாராக உள்ளது என்று கூறினார்.
“மூன்று கொவிட்-19 தடுப்பூசிகள் இந்தியாவில் வெவ்வேறு சோதனை நிலைகளில் உள்ளன. இந்தியர்களிடையே அதன் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான வரைத் திட்டமும் தயாராக உள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
“விஞ்ஞானிகள் பச்சை சமிக்ஞை அளித்தவுடன், நாடு அவர்களின் பெரிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசியைத் தொடங்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறினார்.
ஜனவரி மாதம் நாட்டில் அச்சுறுத்தல் பதிவாகியதிலிருந்து கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்து இடைவிடாமல் போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற முன்னணிப் பணியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
இந்த தொற்றுக் காரணமாக நாட்டில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.