தேசியக் கூட்டணி குறித்த குழப்பங்கள் இன்னும் தெளிவு காண முடியாதபடி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்தப் பிரச்சனையைத் தற்போதைக்கு மஇகா சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறது.
இதன் மூலம் மஇகா தனித்துவமான முறையில் இயங்க முடியும். தேசிய முன்னணி என்பதும் – அம்னோவுடனான கூட்டணி – என்பதும் மஇகாவின் வரலாற்று பாரம்பரியம். அதிலும் தற்போது பாஸ் கட்சியுடன் நல்லுறவுகளை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் பெருமளவில் வலுப்படுத்தியிருக்கிறார்.
அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து முவாபாக்காட் நேஷனல் கூட்டணியைக் கண்டிருக்கின்றன. இதில் பெர்சாத்து கட்சியும் அண்மையில் இணைந்திருக்கிறது.
இந்நிலையில் பெர்சாத்து கட்சியின் முன்னெடுப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் தேசியக் கூட்டணியில் இணைவதால் மஇகாவுக்கு கூடுதலான பலமோ அரசியல் இலாபமோ கிடைக்கப் போவதில்லை.
எனவேதான், ஒருசில அரசியல் சக்திகளின் இழுத்த இழுப்புக்கெல்லாம் இணங்கி விடாமல், தனது தனித்துவத்தைக் காட்டும் விதத்தில் மஇகா இந்த முடிவை எடுத்திருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
இதன் மூலம் மஇகாவின் அடிமட்டத் தொண்டர்களிடத்திலும், உறுப்பினர்களிடத்திலும் தெளிவையும் மஇகா தலைமைத்துவம் ஏற்படுத்தியிருக்கிறது.
மஇகா விலகுவதற்குக் காரணம் பெர்சாத்துவா?
மேலும் பெர்சாத்து கட்சி பல இனக் கட்சியாக உருவெடுப்பதாகவும் இந்தியர்கள் தங்களின் கட்சியில் சேரலாம் எனவும் அந்தக் கட்சியில் புதிதாக இணைந்திருக்கும் அஸ்மின் அலி அறைகூவல் விடுத்திருந்தார். இதுவும் மஇகா தலைமைத்துவத்தின் உணர்வுகளை உரசிப் பார்த்திருக்கிறது.
மஇகா தேசியக் கூட்டணியில் இருந்து ஒதுங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அப்படியே தேசியக் கூட்டணியில் இடம் பெற்றாலும், பொதுத் தேர்தல் என்று வரும்போது பாரம்பரியமாக தேசிய முன்னணியின் சின்னத்தில்தான் மஇகா போட்டியிடுமே தவிர தேசியக்கூட்டணியின் சின்னத்தில் அல்ல!
எனவே, தாங்கள் பயன்படுத்த முடியாத ஒரு சின்னத்தைக் கொண்ட கூட்டணியில் இணைவதில் மஇகாவுக்கு பயன் ஏதும் விளையப் போவதில்லை.
தாங்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் இலக்குகளின்படி 9 அல்லது 10 நாடாளுமன்றத் தொகுதிகளையும் சுமார் 18 சட்டமன்றத் தொகுதிகளையும் தேசிய முன்னணியின் கீழ் பெற்றுவிட்டாலே மஇகாவுக்கு அது மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்படும்.
அம்னோ, தேசிய முன்னணிக்கு இயல்பாகவே இருக்கக் கூடிய வாக்கு வங்கியோடு பாஸ் கட்சியின் ஆதரவையும் இணைத்து, தாங்கள் பெறக் கூடிய தொகுதிகளில் சிலவற்றில் மஇகா வெற்றி பெற முடியும்.
கடந்த பொதுத் தேர்தலை விட, கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும் – மஇகாவின் வலிமையை அது காட்டும் என்பதோடு, விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் அந்த வெற்றிகள் பார்க்கப்படும்.
எனவே, பயனில்லாத ஒரு கூட்டணியில் இணைவதற்கு பதிலாக எப்போதும் போல் தேசிய முன்னணியிலேயே தனித்துவமாக இயங்கும் முடிவை மஇகா துணிச்சலுடன் எடுத்திருக்கிறது.
2018-ஆம் ஆண்டுக்கு முன்பு தேசிய முன்னணியில் இடம் பெற்றிருந்த கெராக்கான், மைபிபிபி போன்ற கட்சிகள் இந்தியர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டிருந்த பல இனக் கட்சிகளாகும்.
2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த இரண்டு கட்சிகளும் தேசிய முன்னணியில் இருந்து விலகிவிட்டன.
தேசியக் கூட்டணியில் முதலில் இணைந்த மஇகா
அம்னோ தேசியக் கூட்டணியில் இணைவதற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து மஇகாவும் அண்மையில் அக்கூட்டணியில் இணைவதற்காக சங்கங்களின் பதிவகத்திடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தது.
தேசியக் கூட்டணியில் இருந்து ம.இ.கா வெளியேறி இருப்பதை அதன் நிர்வாகச் செயலாளர் ஏ.கே. இராமலிங்கமும் (படம்) உறுதிப்படுத்தியுள்ளார்.
தேசியக் கூட்டணியில் இணையும் விண்ணப்பத்தை ம.இ.கா மீட்டுக் கொள்வதற்கு அதன் மத்திய செயலவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் இராமலிங்கம் தெரிவித்தார்.
நடப்பு அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தேசிய முன்னணியில் அம்னோவுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கு கட்சி முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.