Home One Line P1 லிம் குவான் எங் மீது மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள்

லிம் குவான் எங் மீது மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள்

542
0
SHARE
Ad

பட்டவொர்த் : இங்குள்ள அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் லிம் குவான் மீது மேலும் புதிய ஊழல் குற்றச்சாட்டுகள் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) சுமத்தப்பட்டன.

லிம் குவான் எங் பினாங்கு மாநில முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது மாநில அரசுக்குச் சொந்தமான இரண்டு நிலங்களை முறைகேடான முறையில் இரண்டு நில மேம்பாட்டாளர்களுக்கு வழங்கினார் என இன்றைய குற்றச்சாட்டுகள் விவரிக்கின்றன.

லிம் குவான் எங் சார்பில் கோபிந்த் சிங் டியோவும், ராம்கர்ப்பால் சிங்கும் வழக்கறிஞர்களாக பிரதிநிதித்தனர்.

#TamilSchoolmychoice

நீதிபதி அகமட் அசாரி அப்துல் ஹாமிட் முன்னிலையில் வழக்கு நீதிமன்றத்தில் செவிமெடுக்கப்பட்டது.

பண்டார் தஞ்சோங் பினாங் வட்டாரத்தில் உள்ள ஒரு நிலத்தை ஈவின் செனித் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு கடந்த 2015, பிப்ரவரி 17-ஆம் தேதி பினாங்கு நிலப் பதிவாளர் மாற்றித் தருவதற்கு குவான் எங் காரணமாக இருந்தார் என முதல் குற்றச்சாட்டு தெரிவித்தது.

குவான் முறைகேடாக நில மேம்பாட்டாளருக்கு மாற்றித் தந்த இந்த நிலத்தின் மதிப்பு 135,086,094 ரிங்கிட் ஆகும்.

இரண்டாவது குற்றச்சாட்டின்படி, கடந்த 2017, மார்ச் 22-ஆம் தேதி பினாங்கு நில, சுரங்க இலாகாவின் பதிவாளர் பண்டார் தஞ்சோங் பினாங் வட்டாரத்திலுள்ள மற்றொரு நிலத்தை செனித் அர்பன் டெவலெப்மெண்ட் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு மாற்றித் தருவதற்கு லிம் குவான் எங் காரணமாக இருந்தார்.

இந்த இரண்டாவது நிலத்தின் மதிப்பு 73,668,986 ரிங்கிட்டாகும்.

இரண்டு குற்றச்சாட்டுகளும் மலேசியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 403-இன் கீழ் கொண்டு வரப்பட்டன. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், லிம் ஆறு மாதங்களுக்குக் குறையாத, 5 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டணை, அபராதம், பிரம்படி ஆகிய தண்டனைகளை எதிர்நோக்கக் கூடும்.

எனினும் 50 வயதுக்கு மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பிரம்படித் தண்டனை விதிக்கப்படுவதில்லை.

குற்றச்சாட்டுகளை மறுத்து லிம் விசாரணை கோரினார்.

இன்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அண்மையில் லிம் குவான் எங் மீது சுமத்தப்பட்ட பினாங்கு கடலடி சுரங்கப் பாதை தொடர்பான வழக்குகளோடு சம்பந்தப்பட்டவையாகும் என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் வான் ஷஹாருடின் தெரிவித்தார்.

அரசு தரப்பில் 10 சாட்சிகள் விசாரிக்கப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் கோலாலம்பூரில் இருக்கின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.