Home One Line P1 சபா: 11 தொகுதிகளில் தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி, பிபிஎஸ் மோதல்கள் தவிர்ப்பு

சபா: 11 தொகுதிகளில் தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி, பிபிஎஸ் மோதல்கள் தவிர்ப்பு

722
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : சபா சட்டமன்றத் தேர்தலில் அனைத்து 73 தொகுதிகளிலும் பல முனைப் போட்டிகள் எதிர்பார்க்கப்படுவதால் இறுதியில் வாரிசான் கட்சியே பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. தேசியக் கூட்டணி- தேசிய முன்னணி-பிபிஎஸ் இடையிலான மோதல்களை 11 தொகுதிகளில் தவிர்ப்பதற்கு இன்று இணக்கம் காணப்பட்டிருக்கிறது.

பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான 90 நிமிட பேச்சுவார்த்தையின்போது இந்த உடன்பாடு காணப்பட்டதாக அம்னோ தேசியத் தலைவர் சாஹிட் ஹாமிடி (படம்) தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மொகிதின் யாசின் தேசியக் கூட்டணியின் தலைவருமாவார்.

எனினும் எந்தத் தொகுதிகளில் எந்தக் கட்சிகள் விட்டுக் கொடுத்து போட்டியிலிருந்து விலகிக் கொள்ளப் போகின்றன என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

பிபிஎஸ் மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கிறது. எனினும் தனியாக 15 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்தது.

முன்னாள் சபா முதல்வர் பைரின் கித்திங்கான் தொடங்கிய பிபிஎஸ் கட்சியின் தலைவராக மேக்சிமஸ் ஓங்கிலி செயல்படுகிறார். இவர் மத்திய அமைச்சராகவும் மொகிதின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்.

பரபரப்பாகும் சபா தேர்தல்

சபாவின் தலைநகர் கோத்தா கினபாலுவில் எல்லா முக்கியக் கட்சிகளும் அணிகளும்  சபா சட்டமன்றத் தேர்தலுக்கான தங்களின் வேட்பாளர்களை நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 10) அறிமுகப்படுத்தின.

தொடக்கம் முதற்கொண்டே தேசியக் கூட்டணிக்கும், அம்னோ தலைமையிலான தேசிய முன்னணிக்கும் இடையில் மறைமுகமாக நிலவி வந்த முட்டல்கள் மோதல்கள் நேற்றைய வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் வெளிச்சத்துக்கு வந்தன.

தேசியக் கூட்டணியின் தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் 29 தொகுதிகளில் தேசியக் கூட்டணி போட்டியிடுவதாக அறிவித்தார். முன்னதாக தேசிய முன்னணி தலைவர்களுடன் இணைந்து வேட்பாளர்களை தேசியக் கூட்டணி அறிவிப்பதாக இருந்தது. எனினும் இறுதி நேரத்தில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தேசியக் கூட்டணி தவிர்த்தது.

நேற்றைய அறிவிப்பைத் தொடர்ந்து 3 தொகுதிகளில் தேசியக் கூட்டணியும், தேசிய முன்னணியும் நேரடியாக மோதுகின்றன.

பாகினாதான் தொகுதியில் அம்னோ தேசியக் கூட்டணியின் உறுப்புக் கட்சியான ஸ்டார் கட்சியுடன் மோதுகிறது. ஸ்டார் கட்சிக்கு முன்னாள் சபா முதலமைச்சர் ஜோசப் பைரின் கித்திங்கானின் தம்பியான ஜெப்ரி கித்திங்கான் தலைமையேற்றிருக்கிறார்.

ஸ்டார் துலிட் தொகுதியில் பிபிஆர்எஸ் கட்சியுடன் மோதுகிறது. பிபிஆர்எஸ் தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியாகும்.

சூக் தொகுதியிலும் ஸ்டார் கட்சி பிபிஆர்எஸ் கட்சியுடன் மோதுகிறது.

இதன் மூலம் எல்லாத் தொகுதிகளிலும் வாரிசான் கட்சியுடன் நேரடிப்போட்டியிட தேசிய முன்னணி-தேசியக் கூட்டணி வகுத்திருந்த வியூகம் செயல்படுத்த முடியாமல் போயிருக்கிறது.

தேசிய முன்னணி-தேசியக் கூட்டணி என இரண்டு அணிகளின் வேட்பாளர் பட்டியலிலும் பாஸ் கட்சி இடம் பெறவில்லை என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்தது 10 இடங்களில் போட்டியிடப் போவதாக பாஸ் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

தேசியக் கூட்டணியில் தொகுதிகள் கீழ்க்காணும் விதத்தில் கட்சிகளுக்கிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன:

எஸ்ஏபிபி கட்சி – 2 தொகுதிகள்

ஸ்டார் – 8 தொகுதிகள்

பெர்சாத்து – 19 தொகுதிகள்

மத்திய அரசாங்கத்தை ஆதரித்துத் தனக்கு ஆதரவாகச் செயல்படும் சபாவைச் சேர்ந்த பல கட்சிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதைத் தவிர்க்கும் முயற்சியில் மொகிதின் யாசின் தற்போது தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 12) சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. தேர்தல் செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.