Home One Line P1 சபா: தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி 3 தொகுதிகளில் நேரடி மோதல்

சபா: தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி 3 தொகுதிகளில் நேரடி மோதல்

606
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : சபாவின் தலைநகர் கோத்தா கினபாலுவில் எல்லா முக்கியக் கட்சிகளும் அணிகளும் விரைவில் நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலுக்கான தங்களின் வேட்பாளர்களை நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 10) அறிமுகப்படுத்தின.

இதன் காரணமாக, கோத்தா கினபாலு நகர் முழுவதிலுமே நேற்று பரபரப்பான சூழல் நிலவியது.

தொடக்கம் முதற்கொண்டே தேசியக் கூட்டணிக்கும், அம்னோ தலைமையிலான தேசிய முன்னணிக்கும் இடையில் மறைமுகமாக நிலவி வந்த முட்டல்கள் மோதல்கள் நேற்றைய வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் வெளிச்சத்துக்கு வந்தன.

#TamilSchoolmychoice

தேசியக் கூட்டணியின் தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் 29 தொகுதிகளில் தேசியக் கூட்டணி போட்டியிடுவதாக அறிவித்தார். முன்னதாக தேசிய முன்னணி தலைவர்களுடன் இணைந்து வேட்பாளர்களை தேசியக் கூட்டணி அறிவிப்பதாக இருந்தது. எனினும் இறுதி நேரத்தில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தேசியக் கூட்டணி தவிர்த்தது.

நேற்றைய அறிவிப்பைத் தொடர்ந்து 3 தொகுதிகளில் தேசியக் கூட்டணியும், தேசிய முன்னணியும் நேரடியாக மோதுகின்றன.

பாகினாதான் தொகுதியில் அம்னோ தேசியக் கூட்டணியின் உறுப்புக் கட்சியான ஸ்டார் கட்சியுடன் மோதுகிறது. ஸ்டார் கட்சிக்கு முன்னாள் சபா முதலமைச்சர் ஜோசப் பைரின் கித்திங்கானின் தம்பியான ஜெப்ரி கித்திங்கான் தலைமையேற்றிருக்கிறார்.

ஸ்டார் துலிட் தொகுதியில் பிபிஆர்எஸ் கட்சியுடன் மோதுகிறது. பிபிஆர்எஸ் தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியாகும்.

சூக் தொகுதியிலும் ஸ்டார் கட்சி பிபிஆர்எஸ் கட்சியுடன் மோதுகிறது.

இதன் மூலம் எல்லாத் தொகுதிகளிலும் வாரிசான் கட்சியுடன் நேரடிப்போட்டியிட தேசிய முன்னணி-தேசியக் கூட்டணி வகுத்திருந்த வியூகம் செயல்படுத்த முடியாமல் போயிருக்கிறது.

தேசிய முன்னணி-தேசியக் கூட்டணி என இரண்டு அணிகளின் வேட்பாளர் பட்டியலிலும் பாஸ் கட்சி இடம் பெறவில்லை என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்தது 10 இடங்களில் போட்டியிடப் போவதாக பாஸ் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

தேசியக் கூட்டணியில் தொகுதிகள் கீழ்க்காணும் விதத்தில் கட்சிகளுக்கிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன:

எஸ்ஏபிபி கட்சி – 2 தொகுதிகள்

ஸ்டார் – 8 தொகுதிகள்

பெர்சாத்து – 19 தொகுதிகள்