கோத்தா கினபாலு : எதிர்வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் மலேசிய சீனர் சங்கம் (மசீச) 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனை சபா மசீச தொடர்புக் குழுத் தலைவர் லூ யென் துங் உறுதிப்படுத்தினார்.
கப்பாயான், எலோபுரா, காராமுந்திங், லிகாஸ் ஆகியவையே அந்த 4 தொகுதிகளாகும்.
சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தத் தொகுதிகளில் தேசிய முன்னணி சார்பில் மசீச போட்டியில் குதிக்கிறது. தேசிய முன்னணியின் சின்னத்திலேயே மசீச போட்டியிடும்.
தேசிய முன்னணி – அம்னோ 31 தொகுதிகளில் போட்டி
இதற்கிடையில் தேசிய முன்னணி சார்பில் 31 தொகுதிகளில் அம்னோ போட்டியிடும் என அம்னோ சபா தொடர்புக் குழுத் தலைவர் புங் மொக்தார் ராடின் அறிவித்துள்ளார்.
தொடக்கம் முதற்கொண்டே தேசியக் கூட்டணிக்கும், அம்னோ தலைமையிலான தேசிய முன்னணிக்கும் இடையில் மறைமுகமாக நிலவி வந்த முட்டல்கள் மோதல்கள் தற்போது தேர்தல் நெருங்க நெருங்க அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
தேசியக் கூட்டணியின் தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் 29 தொகுதிகளில் தேசியக் கூட்டணி போட்டியிடுவதாக அறிவித்தார். முன்னதாக தேசிய முன்னணி தலைவர்களுடன் இணைந்து வேட்பாளர்களை தேசியக் கூட்டணி அறிவிப்பதாக இருந்தது. எனினும் இறுதி நேரத்தில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தேசியக் கூட்டணி தவிர்த்தது.
நேற்றைய வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து 3 தொகுதிகளில் தேசியக் கூட்டணியும், தேசிய முன்னணியும் நேரடியாக மோதுகின்றன.
பாகினாதான் தொகுதியில் அம்னோ தேசியக் கூட்டணியின் உறுப்புக் கட்சியான ஸ்டார் கட்சியுடன் மோதுகிறது. ஸ்டார் கட்சிக்கு முன்னாள் சபா முதலமைச்சர் ஜோசப் பைரின் கித்திங்கானின் தம்பியான ஜெப்ரி கித்திங்கான் தலைமையேற்றிருக்கிறார்.
ஸ்டார் துலிட் தொகுதியில் பிபிஆர்எஸ் கட்சியுடன் மோதுகிறது. பிபிஆர்எஸ் தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியாகும்.
சூக் தொகுதியிலும் ஸ்டார் கட்சி பிபிஆர்எஸ் கட்சியுடன் மோதுகிறது.
இதன் மூலம் எல்லாத் தொகுதிகளிலும் வாரிசான் கட்சியுடன் நேரடிப்போட்டியிட தேசிய முன்னணி-தேசியக் கூட்டணி வகுத்திருந்த வியூகம் செயல்படுத்த முடியாமல் போயிருக்கிறது.
தேசிய முன்னணி-தேசியக் கூட்டணி என இரண்டு அணிகளின் வேட்பாளர் பட்டியலிலும் பாஸ் கட்சி இடம் பெறவில்லை என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்தது 10 இடங்களில் போட்டியிடப் போவதாக பாஸ் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
தேசியக் கூட்டணியில் தொகுதிகள் கீழ்க்காணும் விதத்தில் கட்சிகளுக்கிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன: