கோலாலம்பூர்: முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் ஊழல் தொடர்பான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளை செப்டம்பர் 11-ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளார்.
கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் லிம் மீது வேறுபட்ட வழக்கைக் குறிப்பிட்டு துணை அரசு வழக்கறிஞர் வான் ஷாருடின் வான் லடின் இந்த விஷயத்தைத் தெரிவித்தார்.
பெர்னாமாவின் கூற்றுப்படி, பினாங்கு பட்டர்வொர்த் அமர்வு நீதிமன்றத்தில் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 403-இன் கீழ் லிம் இரண்டு புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிவு 403 நம்பிக்கை மோசடி தொடர்பானது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்கப்படும்.
கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் தம்மீதான் மேலும் இரு குற்றச்சாட்டுகள் குறித்த அறிவிப்பை லிம் கண்டித்தார்.
“சபா தேர்தல் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இது நடத்தப்படுகிறது. இது உண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தப்பட்ட நடவடிக்கையாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
அரசு தரப்பு தனது தேர்தல் பிரச்சார அட்டவணையை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், செப்டம்பர் 25 வரை இரண்டு வாரங்களுக்கு இயங்கும் சபா தேர்தல் பிரச்சாரத்தில் தாம் பங்கேற்க இருப்பதாக அவர் கூறினார்.
லிம் புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு கடந்த வாரம் முதல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் முதல் லிம் மீது மூன்று முறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7-ஆம் தேதி, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் பினாங்கு நகரில் 6.3 பில்லியன் ரிங்கிட் கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக ஊழல் கோரியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆகஸ்ட் 10-ஆம் தேதி, கன்சோர்டியம் ஜெனித் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் இந்த திட்டத்தைப் பெற உதவுவதாகக் கூறி 3.3 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் வாங்கியதாக அவர் மற்றொரு குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.
அடுத்த நாள், எம்.ஏ.சி.சி சட்டம் 2009- இன் பிரிவு 23 (1)- இன் கீழ், அவரது மனைவி பெட்டி செவ் கெக் செங்கிற்கு 372,009 ரிங்கிட் பணத்தைப் பெற உதவியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எல்லா குற்றச்சாட்டுகளையும் லிம் மறுத்தார்.