கோலாலம்பூர்: சுங்கை கோங் ஆற்று நீர் மாசு குறித்த விவகாரத்தை சொஸ்மா சட்டம் கீழ் விசாரிக்கும் சாத்தியக் கூறுகளை காவல் துறை ஆராய்ந்து வருவதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
ஒருவேளை நாச வேலைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டால் இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமென்று அவர் கூறினார்.
இது பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) கீழ் வழக்கை விசாரிக்க உதவும். சொஸ்மா சட்டம் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 28 நாட்களுக்கு விசாரணை இல்லாமல் தடுத்து வைக்க முடியும்.
“நேற்று இது குறித்து நாங்கள் சட்டத்துறை தலைவர் அலுவலகத்துடன் சந்திப்பை மேற்கொண்டோம். சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன, அவற்றை காவல் துறை செயல்படுத்தும்”
“இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாங்கள் இதனை சொஸ்மா கீழ் விசாரிக்க ஆய்வுகள் நடத்தி வருகிறோம்” என்று அவர் கூறினார்.
“மிரட்டல், நாசவேலை மற்றும் தொடர்ச்சியான மோசச் செயல்கள் இருந்தால் காவல் துறை விசாரிப்பார்கள்” என்று அவர் கூறினார்.
இந்த அணுகுமுறை எதிர்கால நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்று அப்துல் ஹாமிட் மேலும் கூறினார்.
சிலாங்கூர் ரவாங்கில் சுங்கை கோங்கில் கண்டுபிடிக்கப்பட்ட மாசு தொடர்பாக நான்கு நபர்களை காவல் துறை முன்னதாகக் கைது செய்திருந்தனர்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 430- இன் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அசுத்தமான எண்ணெய்க் கழிவுகளால் நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையங்கள் தங்களின் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக சேவைகளை வியாழக்கிழமை (செப்டம்பர் 3) முதல் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதன் காரணமாக, சிலாங்கூரின் 1,292 பகுதிகளில் உள்ள சுமார் 1.2 மில்லியன் இல்லங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று இது குறித்துக் கருத்துரைத்த சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைதான் தூய்மைக் கேட்டுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டார். அந்தத் தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டதாகவும், அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.