Home One Line P1 சிலாங்கூர் நீர் தடை: 91.15 விழுக்காடு விநியோகம் சரிப்படுத்தப்பட்டது

சிலாங்கூர் நீர் தடை: 91.15 விழுக்காடு விநியோகம் சரிப்படுத்தப்பட்டது

862
0
SHARE
Ad

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் ஏற்பட்டிருக்கும் நீர் விநியோகத் தடை இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணி வரையில் ஏறத்தாழ 91.15 விழுக்காடு சரிசெய்யப்பட்டது.

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இந்தத் தகவலைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 73.37 விழுக்காடு பகுதிகளுக்கு நீர் விநியோகம் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியிருக்கிறது.

#TamilSchoolmychoice

நீர் விநியோகம் மீண்டும் கிடைக்கப் பெற்றவர்கள் தங்களின் இல்லங்களில் தண்ணீரைச் சிக்கனமாகவும், அதிக அளவில் நீர் வெளியேறாதவண்ணம் பயன்படுத்தப்படும்படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதன் மூலம் நீர் விநியோகம் இன்னும் கிடைக்காதவர்களின் இல்லங்களில் குறைந்த அளவில் நீர்வரத்து பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாதிப்புகளை ஏற்படுத்தியவர்களுக்கு 6 நாட்களுக்குத் தடுப்புக் காவல்

இதற்கிடையில், சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டதன் தொடர்பில் ரவாங் சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக் கேடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த நான்கு தொழிற்சாலைகளின் மேலாளர்கள் (மானேஜர்) கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த வார இறுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களை அடுத்த 6 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

50 முதல் 60 வயதுவரையிலான அந்த நால்வரும் எதிர்வரும் வியாழக்கிழமை வரை தடுப்புக் காவலில் விசாரிக்கப்படுவர். அந்த நால்வரும் சகோதரர்களாவர். அவர்களின் தந்தையின் மரணத்திற்குப் பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை நிருவகித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் கோம்பாக் வட்டார காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்கள் நடத்தும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அசுத்தமான எண்ணெய்க் கழிவுகளால் நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையங்கள் தங்களின் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக சேவைகளை வியாழக்கிழமை (செப்டம்பர் 3) முதல் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதன் காரணமாக, சிலாங்கூரின் 1,292 பகுதிகளில் உள்ள சுமார் 1.2 மில்லியன் இல்லங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று இதுகுறித்துக் கருத்துரைத்த சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைதான் தூய்மைக் கேட்டுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டார். அந்தத் தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டிருக்கிறது. அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தொழிற்சாலையில் உரிமையாளர்கள் அதனை உடைத்துத் தரைமட்டமாக்க வேண்டும். இல்லாவிட்டால் அமுலாக்க அதிகாரிகளே அந்தத் தொழிற்சாலையை உடைத்து அந்த இடத்தைக் காலி செய்வார்கள் என்றும் அமிருடின் ஷாரி கூறினார்.

அந்தத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அசுத்தக் கழிவுகள் சுங்கை கோங் ஆற்றிற்கு திசை திருப்பிவிடப்பட்டிருக்கிறது. சுங்கை கோங் ஆறு சுங்கை செம்பா நதியில் சென்று கலக்கிறது. சுங்கை சிலாங்கூரின் முக்கியக் கிளை ஆறுகளில் சுங்கை செம்பா ஒன்றாகும்.

சிலாங்கூரில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்புகிறது

சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் தடைசெய்யப்பட்டு அவதிக்குள்ளாகியிருக்கும் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவுக்குள் சுமார் 50 விழுக்காட்டுப் பகுதிகளில் நிலைமை சரிசெய்யப்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டது.

மாநில அரசாங்கம், சம்பவந்தப்பட்ட அதிகாரிகளின் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் காரணமாக நீர் விநியோகம் கட்டம் கட்டமாக சரி செய்யப்பட்டு வருகிறது.

சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் இலாகா, காவல் துறை, செலாயாங் மாநகர் மன்றம், கோம்பாக் நில, வட்டார அலுவலகம் ஆகிய தரப்புகளுடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றையும் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நடத்தியிருக்கிறார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் முன்அறிவிப்பின்றி தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதில் சுமார் 1 மில்லியன் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

சில இடங்களில் தண்ணீர் விநியோகம் பொதுமக்களுக்கு நேரடியாக மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் வரிசையில் நின்று சொந்த கொள்கலன்களுடன் தண்ணீரைப் பெற்றுச் சென்றனர்.

முதல் கட்டமாக மருத்துவமனைகளுக்கும் சிறுநீரக சுத்திகரிப்பு மையங்களுக்கும் (டயாலிசிஸ்) தண்ணீர் விநியோகம் மீண்டும் திரும்ப அதிகாரிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.