Home One Line P1 சபா தேர்தல் : பிகேஆர் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

சபா தேர்தல் : பிகேஆர் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

791
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : விரைவில் நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சிக்குப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தவும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோத்தா கினபாலுவுக்கு வருகை தந்திருக்கிறார்.

அவருடன் அவரின் துணைவியார் வான் அசிசா இஸ்மாயில், பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் ஆகியோரும் வருகை தந்திருக்கின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) காலையில் சபா முதல்வரும் வாரிசான் கட்சியின் தலைவருமான ஷாபி அப்டாலுடன் அன்வார் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

#TamilSchoolmychoice

பிகேஆர் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் சபா தேர்தலில் வாரிசான் கட்சியோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பிகேஆர் 8 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது 60 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல்கள் நடைபெற்றன.

ஆனால் இந்த முறை தொகுதிகளின் எண்ணிக்கை 73 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. “இதனால் கூடுதலான தொகுதிகளில் போட்டியிட முடியும் எனக் கருதுகிறோம்” என ஷாபி அப்டாலுடனான சந்திப்புக்குப் பின்னர் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

“பிகேஆர் கட்சி சபாவில் வலுவுடன் திகழ்கிறது. சிலாங்கூர் மாநிலத்திற்கு அடுத்து அதிகமான உறுப்பினர்களை சபா மாநிலத்தில் பிகேஆர் கொண்டிருக்கிறது” என்றும் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

தங்களின் சந்திப்பின்போது எதிர்வரும் சபா தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையையும் ஷாபி அப்டால் வெளிப்படுத்தினார் என்றும் சைபுடின் கூறினார்.

சபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறும்.