கோலாலம்பூர்: தேசியக் கூட்டணி, அரசியல் பிரிவின் கீழ் கடந்த ஆகஸ்டு 7-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக சங்கப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் ஷாம்சுல் இஸ்காண்டார் முகமட் அகின், தேசிய கூட்டணிக் முறையாகப் பதிவு செய்யப்பட்டதா என்பதை நிரூபிக்க இயலுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
சபா மாநிலத் தேர்தலில் தேசிய கூட்டணி 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பிகேஆர் இளைஞர் துணைத் தலைவர் சைட் பட்லிஷா சைட் ஒஸ்மான், சங்கப் பதிவுத் துறையின் இணையத்தளத்தில் கட்சியின் பதிவு குறித்து எந்தவொரு பதிவும் கிடைக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் இந்த கேள்வியை முன்வைத்தார்.
“அதனால், நான் மொகிதின் யாசினிடம் சவால் விடுகிறேன். கூட்டணி பதிவு செய்யப்பட்டதற்கான சங்கப் பதிவாளர் ஆதாரத்தை வெளியிடுங்கள்.
“ஒருவேளை தேசியக் கூட்டணியை முறையாகப் பதிவு செய்யாவிட்டால், தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா வேட்பாளர்களின் தகுதியையும் இரத்து செய்ய வேண்டும்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
கடந்த மார்ச் மாதம் ஆட்சியை அமைத்ததை அடுத்து, முதல் முறையாக தேசியக் கூட்டணி தேர்தலில் களம் இறங்குகிறது.
இதற்கிடையில், குடிமக்கள் என்ற முறையில் மக்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்த தேர்தல்கள் ஒரு முக்கியமான தளமாகும் என்று ஷாம்சுல் கூறினார்.
“மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான அடுத்த பிரதிநிதியை சட்டப்பூர்வமான கட்சியிலிருந்து தேர்வுசெய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.
” சட்டவிரோத அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் போட்டியிட அனுமதிக்கப்பட்டால், இது மலேசியாவின் நாடாளுமன்ற ஜனநாயக முறைமைக்கும் மக்களுக்கும், குறிப்பாக சபா மக்களுக்கும் அவமானம்” என்று அவர் மேலும் கூறினார்.