கோலாலம்பூர் : செல்லியல் இணைய ஊடகம் இணையத் தளம் வழியாகவும் திறன்பேசிகளில் குறுஞ்செயலி வழியாகவும் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் வெற்றிகரமாகக் கடந்து விட்டன.
2012 டிசம்பரில் மலேசியாவின் முதல் குறுஞ்செயலி வழியான தமிழ் இணைய ஊடகமாக அறிமுகம் கண்டது செல்லியல்.
அன்றைய சூழலில் உலக அளவிலும் முதன் முதலாக குறுஞ்செயலி வடிவில் தொடக்கம் கண்ட தமிழ் இணைய ஊடகங்களில் ஒன்றாக செல்லியல் விளங்கியது.
இன்றும் மலேசியாவில் இணையம், குறுஞ்செயலி என இரு தளங்களிலும் தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகள் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே இணைய ஊடகம் செல்லியல்தான்.
எங்களின் வெற்றிக்குத் துணைநின்ற வாசகர்களுடன் இந்தப் பெருமையைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறோம்.
இத்தனை ஆண்டுகளில் செல்லியல் வழங்கி வந்த எத்தனையோ செய்திகளில் “செல்லியல் பார்வை” எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கும் அரசியல், சமூகப் பார்வைகள், உலக அரசியல் நடப்புகள் குறித்த கட்டுரைகள் தனித்துவமிக்கவை. கூர்மையும், ஆழமும், வரலாற்று அம்சங்களையும் உள்ளடக்கியிருந்த அவை, பரவலான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை.
2017-ஆம் ஆண்டில் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் தனது கைவண்ணத்தில் உருவான “செல்லியல் பார்வை” கட்டுரைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து “செல்லியல் பார்வைகள்” என்ற தலைப்பில் நூலாகவும் வெளியிட்டார்.
செல்லியல் தளத்தின் தனித்துவமாக விளங்கிய “செல்லியல் பார்வை” என்ற தலைப்பிலேயே அரசியல், சமூகம் முதலிய கோணங்களின் ஆய்வுப் பார்வைகளை, முதல் கட்டமாக காணொலி வடிவில் அனைத்துத் தளங்களிலும் வழங்கவிருக்கிறோம்.
ஆம்!
செல்லியல், இனி காணொலி (வீடியோ) வடிவிலும், உங்களை வந்தடையவிருக்கிறது.
இதற்காகக் கடந்த பல மாதங்களாக செல்லியல் குழுமம், திட்டங்களிட்டு பல செயலாக்கப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
இதற்கான தொழில் நுட்ப அம்சங்களை வடிவமைப்பதில் செல்லியல் தோற்றுநரும் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
புதன்கிழமை செப்டம்பர் 16-ஆம் தேதி, மலேசியா தினம் என்ற அரசியல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் முதல் “செல்லியல் பார்வை” காணொலி வடிவில் வலம் வரவிருக்கிறது.
இணையத் தளம், குறுஞ்செயலி, சமூக ஊடகங்கள், என பல்வேறு தளங்களில் உலகத் தமிழர்களுக்காக செய்திகளை வழங்கி வந்த செல்லியல் இனி காணொலிளி வடிவிலும், உங்களை வந்தடையும்.
அதன்வழி இனி அடிக்கடி சந்திப்போம்!
வழக்கம்போல் உங்களின் வற்றாத ஆதரவும், தயக்கமில்லாத கருத்துகளும், ஊக்கமளிக்கும் வகையிலான வரவேற்பும் கிடைக்கும் என நம்புகிறோம்.
அன்புடன்,
செல்லியல் குழுமம்