
புது டில்லி: கொவிட்19 காலத்தில் இந்தியாவில் புலம்பெயர்தோருக்கு எதிராக அரசாங்கம் கருணைக் காட்டவில்லை என்று பலர் குற்றம் கூறி வந்தனர்.
பலர் கால் நடையாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் புகைக்கப்டங்கள் செய்திகளாக வெளியிடப்பட்டன.
பலர் இக்காலக்கட்டத்தில் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், முழு ஊரடங்கு உத்தரவுக் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து எவ்வித தகவல்களும் அரசாங்கத்திடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எத்தனை தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரியாது. எனவே அவர்களுக்கான இழப்பீடு அல்லது நிவாரணம் குறித்து எந்த அவசியமும் ஏற்படவில்லை” என்று மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து அரசாங்கத்தின் தரவு, அவர்களுக்கான இழப்பீடுகள் என நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த பதிலானது எதிர் கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு காலத்தில் எத்தனை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தனர், எத்தனை பேர் வேலை இழந்தனர் என்பது மோடி அரசுக்குத் தெரியவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“நீங்கள் கணக்கிடவில்லை என்றால், இறப்புகள் நடக்கவில்லையா? அரசாங்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று ராகுல் காந்தி பதிவு செய்துள்ளார்.