Home One Line P1 1எம்டிபி நிதி குறைந்த விலை குடியிருப்புகள் வாங்க பயன்படுத்தப்பட்டது

1எம்டிபி நிதி குறைந்த விலை குடியிருப்புகள் வாங்க பயன்படுத்தப்பட்டது

662
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (டிஆர்எக்ஸ்) மற்றும் பண்டார் மலேசியா திட்டங்களுக்காக திரட்டப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர்களில் ஒரு பகுதி பினாங்கு, ஆயர் ஈத்தாமில் குறைந்த விலை குடியிருப்புகள் கட்ட நிலம் வாங்குவதற்கு செலவிடப்பட்டதாக 1எம்டிபி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் ஹாசிம் அப்துல் ரஹ்மான் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2013 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​முன்னாள் பிரதமர் இந்த நிலத்தை 1எம்டிபி மேம்படுத்தும் என்று கூறியிருந்தார்.

“ஈட்டப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை, அம்னோ அதன் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு பகுதியை செலவிட்டது”

#TamilSchoolmychoice

“எவ்வாறாயினும், இந்த பினாங்கு நிலம் வாங்குவதை நாங்கள் (1எம்டிபி) எங்கள் கூட்டங்களில் விவாதித்ததில்லை. இந்த நிதி டிஆர்எக்ஸ் நிறுவனத்திற்காக இருந்தது, ” என்று ஹாசிம் கூறினார்.

1எம்டிபியில் பொறுப்பேற்ற பிறகு, தனக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள் நிதி திரட்டும் நோக்கங்களுக்கான உக்தி மட்டுமே என்பதை அவர் அறிந்ததாக சாட்சி கூறினார்.

இந்த திட்டங்கள் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவால் திட்டமிடப்பட்டதாகவும் ஹாசிம் சாட்சியம் அளித்தார்.

முன்னதாக, நேற்று, அரசியல் நிதியுதவி பெறுவதில் அம்னோவுக்கு உதவுவதற்காக 1எம்டிபி நிதி ஏற்படுத்தப்பட்டதாக ஜோ லோ ஒரு முறை தம்மிடம் கூறியதாக ஹாசிம் தெரிவித்திருந்தார்.

2012-ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று புத்ராஜெயா ஷாங்க்ரி-லா தங்கும் விடுதியில் அவர்கள் நடத்திய சந்திப்பின் போது ஜோ லோ தம்மிடம் இதைச் சொன்னதாக அவர் கூறினார்.

சந்திப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, 1எம்டிபியில் தலைமை இயக்க அதிகாரியாக பணியாற்ற ஆர்வமாக உள்ளீர்களா என்று கேட்டு அஸ்லினிடமிருந்து (நஜிப்பின் மறைந்த அந்தரங்கச் செயலாளர்) ஓர் அழைப்பு வந்தது என்று ஹாசிம் கூறினார்.

சந்திப்பின் போது, ​​திரெங்கானு முதலீட்டு ஆணையம் (டிஐஏ) அமைப்பது குறித்தும், மத்திய அரசு அதை எவ்வாறு கட்டுப்படுத்தியது மற்றும் அதை 1எம்டிபி என மறுபெயரிட்டது குறித்தும் அஸ்லின் தம்மிடம் கூறியதாக ஹாசிம் கூறினார்.

“1எம்டிபி என்பது நஜிப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் என்பதை நான் புரிந்து கொண்டேன். எந்தவொரு இறுதி முடிவும் அவரைக் கடந்து செல்ல வேண்டும்.

“அந்த நேரத்தில், 1எம்டிபியில் பணியாற்ற நான் தயக்கம் காட்டினேன். ஏனெனில், அரசியல் தொடர்பான முடிவுகளை நான் பின்பற்ற வேண்டியிருக்கும் என்பதனால்” என்று அவர் கூறினார்.

இருப்பினும், நஜிப் ஒப்புதல் அளித்ததை அடுத்து, வேலை வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று ஹாசிம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“நான் இன்னும் அப்போது சைம் டார்பி துணை நிறுவனத்தின் கீழ் பணிப்புரிந்து வந்தேன். இந்த வேலை வாய்ப்பை நான் நிராகரித்திருந்தால், அது சைம் டார்பியில் எனது வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என்று நான் பயந்தேன். அது பிரதமரின் கண்காணிப்பின் கீழ் வரும் அரசாங்க நிறுவனங்களில் ஒன்றாகும், ”என்று அவர் கூறினார்.

“முதலீடுகள் மற்றும் நிதி திரட்டல் தொடர்பான விஷயங்களில் 1எம்டிபியில் டத்தோஸ்ரீ நஜிப் வைத்த ஆலோசகர் ஜோ லோ என்று நான் சொல்ல முடியும்”

“மலேசியாவிற்கு வெளியே 1எம்டிபியின் முதலீடுகள் அம்னோவின் நலனுக்காக என்று அவர் என்னிடம் கூறினார். என்னால் அவற்றை கேள்வி கேட்க முடியவில்லை” என்று ஹாசிம் மேலும் கூறியிருந்தார்.