கோலாலம்பூர்: நேற்று காலை தாம் பதிவிட்ட டுவிட்டர் பதிவு, மலேசியர்களை முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாக மட்டுமே இருந்தது ன்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் செயல்படுத்தப்படலாம் என்பதற்கான குறிப்பு அல்ல என்று அவர் கூறினார்.
தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில், அவர் அந்த பதிவைப் பதிவிட்டு @zalifahms பயனருக்கு பதிலளித்தார். மாநிலங்களுக்கு இடையில் இயக்கங்களை சிறிது காலம் தடை செய்ய அந்த பயனர் பரிந்துரைத்தார். அதற்கு பதிலளித்த நூர் ஹிஷாம், “அனைவரும் மீண்டும் சிறிது நேரம் வீட்டில் இருக்கலாமா?” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதில் மலேசியர்களிடையே தீவிர விவாதத்தைத் தூண்டியது. அரசாங்கம் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணயை அறிமுகப்படுத்த முடியும் என்ற கவலையை ஏற்படுத்தியது.
“அது (டுவிட்டர் பதிவு) ஒரு புதிய விஷயம் அல்ல. வெளியில் முக்கியமான விவகாரம் இல்லாத மலேசியர்களை வீட்டிலேயே இருக்க நான் மீண்டும் நினைவுபடுத்துகிறேன். நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்திற்கு வெளியே செல்ல வேண்டியிருந்தால் , நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்குக் கட்டுப்படுங்கள்.
“எனது பதிவின் முக்கிய நோக்கம் அதுதான்” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“கொவிட்19 தொற்று அதன் வலிமையை ஒருபோதும் இழக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நமது பாதுகாப்பை குறைத்துவிட்டால் அல்லது எளிதாக எடுத்துக் கொண்டால், சமூகத்தில் தொற்று ஏற்கனவே இருப்பதால் நோய்த்தொற்றுகள் அதிகம் ஏற்படும், ” என்று அவர் கூறினார்.