கோலாலம்பூர்: அம்னோவுக்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான உறவை நிறுத்துமாறு பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்னோ உறுப்பினருமான நஸ்ரி அசிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
அம்னோவின் அடிமட்ட மக்களின் கோரிக்கை இதுவென அவர் கூறியுள்ளார்.
“பெர்சாத்துவை தவிர்த்து, முவாபாக்காட் நேஷனலில், பாஸ் உடன் மட்டுமே நாங்கள் பணியாற்ற வேண்டும் என்று அடிமட்ட மக்கள் உறுதியாக உணர்கிறார்கள்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை, அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசானின் கூற்றுக்குப் பிறகு வெளிவந்துள்ளது. நேற்றைய ஒரு முகநூல் பதிவில், கட்சியின் தலைவர் சாஹிட் ஹமிடி, சபாவில் நடந்தது ஏமாற்றமளிப்பதாகக் கூறி, கட்சிக்கு தெளிவான வழிமுறைகளை வழங்குமாறு முகமட் ஹசான் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த விஷயத்தில் அம்னோ உச்சமன்றக் குழுவே முடிவு செய்யும் என்று சாஹிட் கூறியுள்ளார்.
முகமட் ஹசான் அழைப்பு மற்றும் சாஹிட்டின் பதிலை வரவேற்ற நஸ்ரி, பெர்சாத்து தீபகற்ப மலேசியாவில் பெரிதாகக் ஏற்கப்படவில்லை என்றும், சபாவில் ஆதரவை கொண்டிருப்பதாகக் கூறினார்.
“அம்னோ மற்றும் பாஸ் அடிமட்ட ஆதரவைக் கொண்டுள்ளன. 14-வது பொதுத் தேர்தல் முதல் ஆறு இடைத்தேர்தல்களில் பெரிய வெற்றியைப் பெற்றதன் மூலம், பெர்சாத்துவை இரண்டு முறை வீழ்த்தினோம் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
“எனவே நாம் அடிமட்ட உறுப்பினர்களைக் கேட்க வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.
14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் பெர்சாத்து தலைவர்கள் அம்னோ குறித்துக் கூறிய கருத்துகள் குறித்து கூறிய முகமட் ஹசான், “பல பெர்சாத்து உறுப்பினர்கள் எங்களை நோக்கி எறிந்த அவமானங்கள், அவமதிப்பு மற்றும் அவமரியாதைக்குரிய கருத்துக்கள் இன்னும் நினைவில் உள்ளன” என்று கூறினார்.
அம்னோ தொகுதித் தலைவராக, அடிமட்டத்தில் உள்ள உறுப்பினர்களின் உணர்வுகளை அவர் அறிந்திருப்பதாக நஸ்ரி கூறினார்.
கட்சியின் தலைமை அடிமட்டங்களுக்கு, நமக்கு வாக்களிக்கும் மக்களைக் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.