கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (அக்டோபர் 3) மின்னல் பண்பலையின் ஏற்பாட்டில் உள்ளூர் கலைஞர்களின் பாடும் திறனை வளர்க்கும் – வெளிக் கொணரும் முயற்சியாக – நடத்தப்பட்டு வந்த மின்னும் நட்சத்திரம் 2020 பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்று நிகழ்ச்சி ஆர்டிஎம் தொலைக்காட்சி டிவி 2 அலைவரிசையில் இரவு 9.00 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக அரங்கேறும்.
பார்வையாளர்களோடு இன்று இரவு அங்காசாபுரியில் உள்ள பெர்டானா அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதில் உதவும் ஒரு நடவடிக்கையாக ஆர்டிஎம் நிருவாகம் மின்னலின் மின்னும் நட்சத்திரம் பாடல் திறன் போட்டியை பார்வையாளர்கள் இல்லாமல் நேரலையாக தொலைக்காட்சி இரண்டில் ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளது.
அனைத்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மின்னல் நிர்வாகமும் இந்நிகழ்ச்சி குறித்த விவரங்கள், வெற்றியாளர்களுடைய பெயர்களை மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கும்.
எதிர்பாராமல் ஏற்பட்ட சிரமங்களுக்கு மின்னல் நிருவாகம் தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டது.
மின்னல் பண்பலையின் பாடும் திறன் போட்டி
இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டபோது 500- க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தமிழ் மற்றும் தேசிய மொழியில் பாடி தங்களுடைய காணொலிகளை #minnalstar2020 என பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தனர்.
500- க்கு மேற்பட்ட போட்டியாளர்களுடன் தொடங்கிய முதல் கட்டம் தற்போது இறுதிச் சுற்றை அடைந்துள்ளது.
மின்னலின் மின்னும் நட்சத்திரம் பட்டத்தை வெல்ல நடக்கும் இசையுத்தத்தில், இறுதிச் சுற்று மேடைக்கு தகுதி பெற்ற எட்டு போட்டியாளர்களில் மூவர் ஆண்கள், ஐவர் பெண்கள்.
பாடும் திறனை வளர்க்கும் முயற்சியில் மின்னல் பண்பலை இந்த போட்டியினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு பிரமுகராக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.