கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (அக்டோபர் 3) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 317 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
தொற்றுநோய் பாதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான தொற்றுநோய்கள் இன்று பதிவாகியுள்ளன.
இவை அனைத்துமே உள்நாட்டில் பரவிய தொற்று என்பது அதிர்ச்சி அளிக்கும் இன்னொரு திருப்பமாகும். வெளிநாட்டுத் தொற்றுகள் என ஒன்றுமே இல்லை.
இதைத் தொடர்ந்து மலேசியாவில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 12,088 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 121 பேர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,216 ஆக உயர்ந்தது.
இன்னும் 1,735 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 29 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.
இன்று மேலும் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 137-ஆக உள்ளது.
இதற்கிடையில் 155 தொற்றுகளுடன் அதிகமான பதிவுகளைக் கொண்ட மாநிலமாக சபா இருக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் கெடா 102 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது.
சிலாங்கூர் 32 தொற்றுகளைக் கண்டது. மற்ற மாநிலங்களிலும் திடீரென எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன.