Home One Line P2 கூகுள், ஊடகப் பதிப்பாளர்களுக்கு 1 பில்லியன் டாலர் செலுத்தும்

கூகுள், ஊடகப் பதிப்பாளர்களுக்கு 1 பில்லியன் டாலர் செலுத்தும்

833
0
SHARE
Ad

நியூயார்க் : ஊடகச் செய்திகளின் உள்ளடக்கங்களுக்கான உரிமங்களைப் பெறும் புதியதொரு திட்டத்தின் கீழ் கூகுள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஊடகப் பதிப்பாளர்களுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கட்டணமாகச் செலுத்தும்.

இப்போதைக்கு பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் இருந்து 200 ஊடகப் பதிப்பாளர்களுடன் கூகுள் உரிமம் பெறுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

ஒருகாலத்தில் விளம்பரங்கள் என்றால் அவை, பெரும்பாலும் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களுக்கே சென்று சேர்ந்தன. ஆனால் தொழில் நுட்ப காலமாற்றத்தால், நிலைமை மாறியது.

#TamilSchoolmychoice

இன்றைக்கு பெரும்பான்மையான வணிக நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களை மின்னூடகங்களுக்கே (Digital media) வழங்குகின்றன. அந்த விளம்பரங்களின் பெரும்பான்மை விழுக்காடு கூகுள், பேஸ்புக் இரண்டு வணிக நிறுவனங்களுக்கு செல்கின்றன.

அதே வேளையில் ஊடகப் பதிப்பாளர்களின் பல செய்திகளை இதுவரையில் பேஸ்புக், கூகுள் தங்களின் தளங்களின் மூலம் இலவசமாக வெளியிட்டு வந்தன. இதன் காரணமாக, உலகம் எங்கிலும் பல அச்சு ஊடகங்கள், ஊடக நிறுவனங்கள் விளம்பர வருமானமின்றி இழப்புகளை எதிர்நோக்கின. பல நிறுவனங்கள் மூடப்பட்டன.

புதிய திட்டத்தின் மூலம் கூகுள், தரமான ஊடகச் செய்திகளைப் பெறுவதற்கும், தள்ளாடிக் கொண்டிருக்கும் ஊடக நிறுவனங்களைக் கைத்தூக்கி விடவும் தனது கடப்பாடாக 1 பில்லியன் டாலர் வரை செலவழிக்க முன்வந்துள்ளது.

இந்தத் திட்டம் “நியூஸ் ஷோகேஸ்” (News Showcase) என அழைக்கப்படும். பின்னர் கட்டம் கட்டமாக ஒலிப்பதிவு, காணொலி பதிவுகள் போன்ற வசதிகள் இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும்.

இதன் மூலம், பங்கு பெறும் ஊடகப் பதிப்பாளர்கள், புதிய தளத்தில் தங்களின் செய்திகளை எவ்வாறு வழங்குவது, பதிவேற்றம் செய்வது போன்ற அம்சங்களை முடிவு செய்து கொள்ள முடியும். இந்தச் செய்திகளைப் படிப்பதற்காக வாசகர்களை ஈர்ப்பதற்கான அம்சங்களையும் ஊடகப் பதிப்பாளர்கள் வடிவமைத்துக் கொள்ளலாம்.

கட்டணம் செலுத்தாத சந்தாதாரர்களுக்கு இலவசமாக சில செய்திகளை கூகுளே வழங்கும். இதற்கான கட்டணத்தை கூகுள் ஊடகப் பதிப்பாளர்களுக்கு செலுத்தும்.

முதற்கட்டமாக, பிரேசில், ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை முதல் (அக்டோபர் 1) இந்த இரு நாடுகளின் பயனர்கள் இந்த நியூஸ் ஷோகேஸ் இணைப்பு வசதியைப் பெற முடியும்.

தொடக்கக் கட்டமாக கூகுள் அண்ட்ரோய்டு தளங்களில் மட்டுமே இந்த வசதி இடம் பெற்றிருக்கும். பின்னர் ஆப்பிள் கருவிகளின் ஐஓஎஸ் தளங்களிலும் இடம் பெறும்.

ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஊடகப் பதிப்பாளர்கள் முதல் கட்டமாக இந்த நியூஸ் ஷோகேஸ் திட்டத்தில் கூகுளுடன் கைகோர்த்துள்ளனர்.

அமெரிக்காவில் இந்தத் திட்டம் எப்போது தொடங்கும் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

நியூஸ் ஷோகேஸ் என்ற இந்த புதிய திட்டம் 1 பில்லியன் டாலர் முதலீடுகளோடு மட்டும் முடிந்து விடாது, அடுத்த மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூகுள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூகுள் தளத்தை உரிமையாளராகக் கொண்ட அல்பாபெட் நிறுவனம் கடந்த ஆண்டில் சுமார் 162 பில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றது. கடந்த ஆண்டின் நிகர இலாபமாக 34.4 பில்லியன் அமெரிக்கா டாலரையும் பதிவு செய்தது.