கோலாலம்பூர்: நேற்று மதியம் கிள்ளான் மாவட்டம் சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தியிருந்தாலும், அப்பகுதிகளில் பள்ளி அமர்வு வழக்கம் போல் தொடரும் என்று சிலாங்கூர் மாநில கல்வித் துறை தெரிவித்தது.
அதன் இயக்குனர், இஸ்மி இஸ்மாயில் கூறுகையில், மலேசிய சுகாதார அமைச்சின் பரிந்துரையைப் பெற்ற பின்னரே எந்தவொரு பள்ளி மூடலும் செய்யப்படும் என்று கூறினார்.
தொற்றுக் கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, கிள்ளானில் இரண்டு பள்ளிகள் சம்பந்தப்பட்ட ஏழு வகுப்புகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன.
“பண்டாமாரான் ஜெயா இடைநிலைப் பள்ளியில் முதலாம் படிவம், ஐந்தாம் படிவ வகுப்பை இது உள்ளடக்கியது. தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் தேசிய பள்ளியில் ஐந்தாம் ஆண்டைச் சேர்ந்த ஆறு வகுப்புகளையும் உள்ளடக்கி உள்ளது”
“இருப்பினும், சிலாங்கூர் மாநில கல்வித் துறை சம்பந்தப்பட்ட அனைத்து வகுப்புகளிலும் துப்புரவு பணிகளை நடத்துகிறது,” என்று அவர் கூறினார்.
பண்டாமாரான் ஜெயா மாணவர்கள், ஆசிரியர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொவிட்19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார அலுவலகத்தின் அனைத்து பரிந்துரைகளுக்கும் இணங்க, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பள்ளி எப்போதும் கடைப்பிடித்து வருகிறது என்று அவர் கூறினார்.
சிலாங்கூரில் நேற்று வரையிலும் 232 சம்பவங்கள் செயலில் உள்ளன. இதில் கிள்ளானில் 77 சம்பவங்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றன.
நேற்றைய நிலவரப்படி, நாட்டில் 691 தொற்று சம்பவங்கள் பதிவாகின. இதுவரையிலும், நாட்டில் பதிவு செய்யப்பட்ட அதிகமான தொற்று எண்ணிக்கை இதுவாகும். மேலும், நேற்று, ஒரு வயது குழந்தை உட்பட நால்வர் மரணமுற்றுள்ளனர்.