சென்னை :அதிமுக சார்பில் அடுத்த முதல்வராக எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் முன்னிறுத்தப்படவிருக்கும் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று புதன்கிழமை காலை (அக்டோபர் 7) வெளியிட்டார்.
இந்த அறிவிப்பினால் அதிமுக வட்டாரங்களிலும், நாடு முழுவதிலும் அதிமுக ஆதரவாளர்களிடத்தில் உற்சாக அலை எழுந்துள்ளது.
அடுத்த முதல்வர் யார் என்பதில் நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் அண்மையில் ஏற்பட்டிருந்தன.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிமுக தலைவர்களிடையே பரபரப்பான பேச்சுவார்த்தைகளும், கலந்தாலோசனைகளும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 2-ஆம் தேதி பன்னீர் செல்வம் மதுரை, பெரியகுளம் வந்து சேர்ந்தார். அங்கு தனது பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் என தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) பல அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உதயகுமார், சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.அன்பழகனுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இரு தரப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து இணக்கமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
பன்னீர் செல்வம் பெரியகுளத்திலிருந்து புறப்பட்டு கார் மூலம் நேற்று சென்னை திரும்பினார். அதைத் தொடர்ந்து இன்றைய அறிவிப்பை அவரே வெளியிட்டார்.
பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்தும் விதமான அதிமுக வழிகாட்டும் குழுவில் அவர் பரிந்துரைக்கும் சிலரை நியமிக்க பழனிசாமி ஒப்புக் கொண்டு அதன்படி பெயர்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், மற்றும் ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்பி., கோபால கிருஷ்ணன், மாணிக்கம் (சோழவந்தான் எம்எல்ஏ), முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக பழனிசாமி அறிவித்தார்.
இரு தரப்புகளுக்கும் இடையில் சமாதானமாகி, இணக்கமான சூழல் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து அதிமுக இனி ஒன்றுபட்டு, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வலிமையுடன் திமுக கூட்டணியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.