சென்னை : நாளை புதன்கிழமை (அக்டோபர் 7) அதிமுக சார்பில் அடுத்த முதல்வராக எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் முன்னிறுத்தப்படவிருக்கும் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படவிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைவர்களிடையே பரபரப்பான பேச்சுவார்த்தைகளும், கலந்தாலோசனைகளும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.
அடுத்த முதல்வர் யார் என்பதில் நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 2-ஆம் தேதி பன்னீர் செல்வம் மதுரை, பெரியகுளம் வந்து சேர்ந்தார். அங்கு தனது பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் என தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பல அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உதயகுமார், சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.அன்பழகனுடன் ஆலோசனை நடத்தினார்.
இரு தரப்புகளுக்கும் இடையில் சமரசப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் பன்னீர் செல்வம் பெரியகுளத்திலிருந்து புறப்பட்டு கார் மூலம் சென்னை திரும்பினார்.
இரு தரப்புகளுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில் பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்தும் விதமான அதிமுக வழிகாட்டும் குழுவில் அவர் பரிந்துரைக்கும் சிலரை நியமிக்க பழனிசாமி முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து நாளைய அறிவிப்பு அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கும் விதத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவினரை அடுத்த சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயார்ப்படுத்தும் விதத்தில் இருதரப்புகளும் சமாதானம் காணும் என்றும் சுமுகமான அறிவிப்பு நாளைக் காலை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.