Home One Line P1 செல்லியல் பார்வை : “அன்வாரின் அறிவிப்பும், மாமன்னரின் அதிகாரங்களும்”

செல்லியல் பார்வை : “அன்வாரின் அறிவிப்பும், மாமன்னரின் அதிகாரங்களும்”

2265
0
SHARE
Ad

செல்லியல் பார்வை | Anwar Ibrahim’s announcement and the powers of Yang Di Pertuan Agong | 05 October 2020
“அன்வாரின் அறிவிப்பும் மாமன்னரின் அதிகாரங்களும்!”

(கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி செல்லியல் பார்வை காணொலி தளத்தில் இடம் பெற்ற “அன்வாரின் அறிவிப்பும், மாமன்னரின் அதிகாரங்களும்” என்ற தலைப்பிலான மேற்கண்ட காணொலியின் கட்டுரை வடிவம்)

கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அடுத்த பிரதமராவதற்கு நாடாளுமன்றப் பெரும்பான்மையைத் தான் பெற்றுள்ளதாகத் திட்டவட்டமாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், அவரது அறிவிப்புக்கு முன்னரே செப்டம்பர் 21-ஆம் தேதி மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் தேசிய இதயநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அரண்மனை அறிவித்தது.

இதைத் தொடர்ந்து பலவிதமான சர்ச்சைகளும், விவாதங்களும் ஊடகங்களிலும், மக்கள் மன்றங்களிலும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இந்த விவாதங்கள் அனைத்தையும் மூன்று கேள்விகளுக்குள் இன்றைய நிலையில் அடக்கி விடலாம்.

முதலாவது கேள்வி, பிகேஆர் கட்சித் தலைவரும், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவருமான அன்வார் இப்ராகிமைச் சந்திக்காமல் மாமன்னர் தவிர்க்க முடியுமா?

அப்படியே அன்வாரைச் சந்தித்து, பெரும்பான்மை பலத்தை அன்வாரும் மாமன்னரிடம் நிரூபித்து விட்டார் என வைத்துக் கொள்வோம். அதற்குப்பின்னர் அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு அவரை அழைக்காமல் மாமன்னர் தவிர்க்க முடியுமா, காலம் தாழ்த்த முடியுமா என்பது எழும் இரண்டாவது கேள்வி.

மூன்றாவது கேள்வி முக்கியமானது! அன்வாரை மாமன்னர் சந்திக்காவிட்டால், பெரும்பான்மையை நிரூபித்தும் அன்வாரைப் பிரதமராக்க முன்வராவிட்டால், அன்வாருக்கு இருக்கும் அடுத்த கட்டத் தேர்வுகள் என்ன?

இந்தக் கேள்விகளை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!

அன்வார் இப்ராகிமைச் சந்திக்காமல் மாமன்னர் தவிர்க்க முடியுமா?

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாமன்னரின் அதிகாரங்களிலும், ஆற்ற வேண்டிய பணிகளிலும் அதிமுக்கியமானது நாட்டின் பிரதமரை முடிவு செய்வது; நியமிப்பது!

எனவே, பிரதமராவதற்கு பெரும்பான்மை தனக்கிருப்பதாகக் கூறும் ஓர் அரசியல் கட்சித் தலைவரை பார்க்க முடியாமல் மாமன்னர் தவிர்ப்பது அவர் தனது கடமையிலிருந்து, வழங்கப்பட்ட பொறுப்புகளில் இருந்து தவறி விட்டார் என்பதைத்தான் காட்டும்.

இத்தகையத் தோற்றத்தை மாமன்னரே விரும்பமாட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 2-ஆம் தேதி மாமன்னர் அரண்மனைக்குத் திரும்பி விட்டார்.

மாமன்னர் அரண்மனையில் இருந்தபடி ஓய்வெடுப்பார் என்றாலும், தனக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறும் தலைவரை, அதனை நிரூபிக்க, தன்னைச் சந்திக்க அனுமதி கேட்கும் தலைவரை இனியும் அவர் தவிர்க்க முடியாது என்றே சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படித் தவிர்த்தால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாமன்னர் தனது கடமையை நிறைவேற்ற மறுக்கிறார் எனப் பொருள் கொள்ளப்படும். மக்கள் மன்றத்தில் மாமன்னரின் நடுநிலை குறித்தும் கேள்விகள் எழும்.

எனவே, எப்போதும் மக்கள் நலனுக்கும், மக்கள் கருத்துக்கும் முக்கியத்துவம் தந்து வரும் நடப்பு மாமன்னர், அடுத்த சில நாட்களுக்குள் அன்வாரைச் சந்தித்துவிடுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

அன்வாரைப் பிரதமராக நியமிக்காமல் மாமன்னர் தவிர்க்க முடியுமா?

சரி! அப்படியே மாமன்னர் அன்வாரைச் சந்தித்து விட்டார் என வைத்துக் கொள்வோம். அதன்பின்னர் அடுத்த பிரதமராகும் அவரது கோரிக்கையை மாமன்னரால் தவிர்க்க முடியுமா?

அரசியலமைப்புச் சட்டத்தின்படி யாருக்கு அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதோ அவரைத்தான் பிரதமராக மாமன்னர் தேர்வு செய்ய வேண்டும். எனவே பிரதமர் நியமனத்திலும் சில வரைமுறைக்குள்தான் மாமன்னர் செயல்பட முடியும்.

அன்வார் தரப்பில் 130 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மாமன்னர் தரப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாமன்னர் பிரதமர் மொகிதின் யாசினையும் அழைத்து அவரது தரப்பையும் கேட்டுத் தெரிந்து கொள்வார். மொகிதின் யாசினிடம் அவரது பெரும்பான்மை பலத்தையும் நிரூபிக்க மாமன்னர் வேண்டுகோள் விடுப்பார்.

அவ்வாறு மொகிதின் தனது பெரும்பான்மையை நிரூபிக்க இயலவில்லை என்றால், மாமன்னருக்கும் வேறு வழியில்லை. பெரும்பான்மை கொண்டுள்ள அன்வாரைத்தான் பிரதமராக நியமிக்க அவர் முன்வர வேண்டும்.

மொகிதின் யாசின் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால், நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மாமன்னரிடம் பரிந்துரைக்கலாம்.

ஆனால், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு முழுக்க முழுக்க மாமன்னரைச் சார்ந்தது.

சபா சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து அதிகரித்திருக்கும் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது மாமன்னர் பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட நிச்சயம் தயங்குவார்.

கொவிட்-19 தொற்றுகளின் அதிகரிப்பு, அன்வாருக்கு சாதகமாக, எதிர்பாராமல் எழுந்திருக்கும் ஓர் அம்சமாகும்.

எனவே,

அன்வாரையும், மொகிதின் யாசினையும் சந்தித்த பின்னர் மாமன்னர் முன் இருப்பது இருப்பது இரண்டு தேர்வுகள்!

ஒன்று, பெரும்பான்மையை நிரூபித்தால் அன்வாரைப் பிரதமராக்குவது!

அல்லது, மீண்டும் அரசியல் குழப்பங்களுக்கும், கட்சித் தாவல்களுக்கும் இடம் கொடுப்பதை தவிர்க்கும் நோக்கில் 15-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழிவிடுவது!

அன்வாரின் தேர்வுகள் என்ன?

சரி! அப்படியே மாமன்னர் அன்வாரைச் சந்திக்கவில்லை, அவரது கோரிக்கையையும் ஏற்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்!

அதற்குப் பின்னர் அன்வாருக்கு இருக்கும் தேர்வுகள் என்ன?

தனக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை மக்கள் மன்றத்தில் அவர் முன்வைக்கலாம்! யார் அவர்கள் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம்!

அல்லது அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும்வரை அவர் காத்திருக்க வேண்டும். எதிர்வரும் நவம்பர் மாதத்தில்தான் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை அவர் நிரூபிக்கலாம். நடப்பு அரசாங்கம் கொண்டுவரும் மசோதாக்களை தனது பெரும்பான்மையைக் கொண்டு தோற்கடிக்கலாம்.

மலேசியாவில் ஆட்சி மாற்றங்களும், பிரதமர் மாற்றங்களும் இதுவரையில் சுமுகமாகவே நடைபெற்று வந்திருக்கின்றன.

அன்வாரின் அறிவிப்பைத் தொடர்ந்து சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படுமா? அல்லது நாடு அரசியல் போராட்டத்திலும், சட்ட சிக்கலிலும் சிக்கிக் கொள்ளுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

-இரா.முத்தரசன்