கோலாலம்பூர்: நாட்டைத் தொடர்ந்து வழிநடத்த பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு தாங்கள் ஆதரவை வழங்குவதாக மசீச மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
புதிய மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கான அன்வார் இப்ராகிம் எந்தவொரு திட்டத்திலும், கட்சி சேரவோ அல்லது பங்கேற்கவோ மாட்டாது என்று தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தலைமையில் அதன் அரசியல் பணியகக் கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டதாக மசீச பொதுச் செயலாளரான டத்தோ சோங் சின் வூன் தெரிவித்தார்.
“அரசியல் நிலைத்தன்மை என்பது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மலேசியாவிற்கு அதிக வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும் ஒரு முன்நிபந்தனையாகும்.
“எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் பொருளாதார மீட்சிக்கு தங்கள் முயற்சிகளை மையமாகக் கொண்டிருப்பது மற்றும் மக்களின் இழப்பில் அனைத்து அரசியல் சூழ்ச்சிகளையும் நிறுத்துவது விவேகமானதாகும்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் நாட்டை மேலும் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு இழுப்பதைத் தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு மே மாதம் மாமன்னர் பிறப்பித்த ஆணையை தலைவர்களும் கட்சிகளும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று சோங் கூறினார்.
கடந்த வாரம், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடினை நாளை செவ்வாய்க்கிழமை சந்திக்க அன்வாருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு “வலுவான, வல்லமைமிக்க மற்றும் உறுதியான” பெரும்பான்மை இருப்பதாக கடந்த செப்டம்பர் 23 அன்று ஒரு திடீர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.