கோலாலம்பூர்: நாளை (அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருக்கும் மாமன்னர் மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இடையேயான சந்திப்பின் முடிவுக்கு நாடு காத்திருக்கும் நிலையில், தற்போதைய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு ஆதரவாக மஇகா தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
“டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா நிர்வாகக் குழு, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்வைத்த எந்தவொரு திட்டத்திலும் அல்லது உரிமைகோரல்களிலும் ஒரு பகுதியாக இருக்கக் கோரவில்லை என்று கட்சி முடிவு செய்துள்ளது. தேசிய கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையை ஆதரிக்க தேசிய முன்னணி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த முடிவுக்கு துணையாக நாங்கள் நிற்கிறோம். பிரதமர் மொகிதின் யாசினுக்கு எங்கள் பிளவுப்படாத ஆதரவை வழங்குவதற்கான கட்சியின் நிலைப்பாட்டை மலேசிய இந்திய காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது ” என்று மஇகா பொதுச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் முனியாண்டி நேற்று இரவு வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
இதனிடையே, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடினைச் சந்திக்க தமக்க்கு அனுமதி வழங்கப்பட்டதாக அன்வார் இப்ராகிம் அண்மையில் குறிப்பிடிருந்தார். இச்சந்திப்பின் போது தமக்கு கிடைக்கப்பெற்ற பெரும்பான்மையை மாமன்னர் முன்னிலையில் சமர்ப்பிக்க இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
கடந்த செப்டம்பர் 23 அன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், தமக்கு வலுவான ஆதரவு இருப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்திருந்தார்.