ஜோர்ஜ்டவுன், ஏப்ரல் 16- ஜோகூர், சபா, சரவா மாநிலங்களில் 83 தொகுதிகளில் 33 தொகுதிகளை மக்கள் கூட்டணி வென்றால் மொத்தம் 112 இடங்களைப் பெற்று புத்ராஜெயாவைக் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
இம்மாநிலங்களில் இருந்து பெறப்படும் வாக்குகள்தான் புத்ராஜெயாவை கைப்பற்ற ஏதுவாக இருக்கும் என்றும் அவர் கருத்துரைத்தார்.
“நான் பேரா, ஈப்போ தீமோர் தொகுதியை விட்டு கேலாங் பாத்தாவுக்கு வந்துள்ளேன். இந்த மூன்று மாநிலங்கள் மக்கள் கூட்டணிக்கான வைப்புத்தொகை மாநிலங்கள். மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 112 தொகுதிகளை பிடித்தாலே மத்தியில் ஆட்சி அமைக்க போதுமானது” என்றார் அவர்.
குறிப்பாக சபா, சரவாக் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகின்றார்கள் என்பதை வைத்துத்தான் மத்தியில் இம்முறை ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது நிர்ணயம் செய்யப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து கணித்து வருகின்றனர்.