Home அரசியல் அப்துல் கனி போட்டியால் கேலாங் பாத்தாவில் மலாய் வாக்குகளை லிம் கிட் சியாங் கவர முடியுமா?

அப்துல் கனி போட்டியால் கேலாங் பாத்தாவில் மலாய் வாக்குகளை லிம் கிட் சியாங் கவர முடியுமா?

642
0
SHARE
Ad

Lim Kit Siangஜோகூர்பாரு, ஏப்ரல் 16 –  தேசிய முன்னணியின் கோட்டையாகக் கருதப்படும் கேலாங் பாத்தா தொகுதியில் வெற்றி பெற, ஜசெகவின் டிஏபி யின் முன்னணித் தலைவர் லிம் கிட் சியாங் அங்கு  பெரும்பான்மையாக இருக்கும் சீன வாக்காளர்களின் மனங்களையும், கவனத்தையும் கவருவது மட்டும் போதாது – மாறாக கடின உழைப்பால் மலாய் வாக்காளர்களைக் கவருவதும் மிகவும் முக்கியமாகும்.

#TamilSchoolmychoice

பெர்னாமாவின் தேர்தல் நிலவர மதிப்பீட்டுப்படி, விரைவாக முன்னேறிவரும் கேலாங் பாத்தா தொகுதியில் எளிதாக வெற்றிபெற  ஜசெகவாக இருந்தாலும் சரி, தேசிய முன்னணியாக இருந்தாலும் சரி அவர்கள் 54 விழுக்காட்டு சீன மற்றும் 33 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்றாக வேண்டும் என்று கருத்துரைத்திருக்கிறது.

மலாய் வாக்குகள் கிட் சியாங்கிற்கு விழுமா?

இதற்கிடையில், மலாய் மற்றும் இஸ்லாம்  எதிர்ப்புக் கொள்கையால் களங்கப்பட்டிருக்கும் லிம் கிட் சியாங்கிற்கு எந்த அளவிற்கு மலாய் வாக்குகள் விழும் என்பதுதான் இப்போதுள்ள  கேள்வி.

இதனால் சந்தேகத்திற்கிடமில்லாமல் கிட் சியாங்கும் ஜசெகவும்  இத்தொகுதியில் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ள வேளையில், பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் கட்சிக்காரர்களும், மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறுவது  குறித்து கவலை தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

முக்கியமாக நகர்ப்புற சீனர்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த கட்சியான ஜசெக – லிம்- மின் மேல் விழுந்த முஸ்லிம்-மலாய் எதிர்ப்பாளர் என்ற களங்கத்தால்,  மலாய்க்காரர்களிடம் வாக்கு சேகரிக்க  மிகப்பெரிய முட்டுக்கட்டையையை அவர்கள்  எதிர்நோக்கி உள்ளனர்.

இதனை லிம் கிட் சியாங்கும்  கவலையுடன் ஏற்றுக்கொண்ட போதும், தானும், தனது கட்சியும் முஸ்லிம்-மலாய் எதிர்ப்புக் கொள்கை கொண்டவர்கள் அல்ல என்றும், அது உண்மைக்குப் புறம்பான  வலிந்து திணிக்கப்பட்ட அவதூறாகும் என்று தெரிவித்த அவர் தான் இன பாகுபாடின்றி அனைவருக்குமே பாடுபட்டுவருவதாகத் தெரிவித்தார்.

கேலாங் பாத்தாவில் மலாய் வாக்காளர்கள் லிம் கிட் சியாங்கை ஏற்றுக்கொள்வார்களா என்று கணிக்க முடியாத நிலையில் பிகேஆர் அவரை வேட்பாளராக அறிவித்தபின் லிம் மற்றும் ஜசெக  தங்களை நிச்சயம் மலாய் வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டு தேசிய முன்னணியின் கோட்டையான ஜோகூரை கைப்பற்றச் செய்வார்கள் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

பேராக் மாநிலத்தில் முன்பு போட்டியிட்ட லிம் இம்முறை கேலாங் பாத்தாவில்  எல்லா இனத்தவர்களின் வாக்குகளையும் பெற்று, தாம் இத் தொகுதியில் வென்றே ஆகவேண்டும் என்று நம்பிக்கைத்  தெரிவித்துள்ளார்.

லிம் மற்றும் அவரது குழுவினர் இரவு பகலாக மலாய் வாக்குகளைப் பெற மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும், அவரது பணிக்குழு, சீனர்கள் அதிகமுள்ள, கேலாங் பாத்தாவில் உள்ள தேர்தல் தலைமையகத்தைச் சுற்றியே கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது.

தற்போது  ஜசெகவின் வியூகம் 80 விழுக்காடு சீன வாக்குகளையும், 5விழுக்காடு மலாய் மற்றும் 5 விழுக்காடு இந்திய வாக்குகளையும் தற்காத்துக்கொள்வதே என்று அங்குள்ள உள்ளூர் அரசியல் பார்வையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தேசிய முன்னணியின் வியூகம் என்ன?

இதனிடையே கேலாங் பாத்தா அம்னோ டிவிஷன் தலைவர் டத்தோ அப்துல் அஸிஸ் சாப்பியான், தேசியமுன்னணி  90 விழுக்காட்டு மலாய் வாக்குகளையும், 60 விழுக்காட்டு இந்திய வாக்குகளையும், 30 விழுக்காட்டு சீன வாக்குகளையும் கையில் வைத்திருப்பதாகவும், தாங்கள் நிச்சயம் இத்தொகுதியை தக்கவைத்துக்கொள்வோம் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.

மேலும்,ஜசெக மலாய் வாக்குகளுக்கு தனது கூட்டணிக் கட்சியான பாஸ் கட்சியைத்தான் நம்பியுள்ளதாகவும் ஆனால் தீவிர பாஸ் ஆதரவாளர்கள் மட்டுமே கிட் சியாங்-கை ஆதரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2008 பொதுத்தேர்தலில் தேசியமுன்னணி கூட்டணிக் கட்சியான மசீச, பிகேஆர் வேட்பாளரை விட 8000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.