கோலாலம்பூர், ஏப்ரல் 16 – வரும் பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னத்தில் போட்டியிட முடியுமா? அல்லது அச்சின்னம் முடக்கி விடப்படுமா என்ற சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்திருக்கின்றது.
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் ஜசெகவின் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் பதிவிலாகா அந்த தேர்தல் குறித்து விசாரிக்க முடிவு செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து வரும் 18ஆம் தேதி சங்கங்களின் பதிவிலாகாவிற்கு வந்து நேரடி விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் சங்கப் பதிவதிகாரி கூறியிருந்த வேளையில், தேர்தலுக்கு பின் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருப்பதாக ஜசெக தேசிய அமைப்பு செயலாளர் அந்தோணி லாவ் கூறினார்.
தங்களின் கோரிக்கையை ஏற்று சங்கங்களின் பதிவிலாகா தேர்தலுக்குபின் விசாரணை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
கட்சித் தேர்தலில் குளறுபடிகள் நடந்திருப்பது உறுதியானால் அக்கட்சியின் சின்னமான ராக்கெட் சின்னம் முடக்கப்படும் என்ற அபாயத்தில் ஜசெக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தேர்தலுக்கு வரை அச்சின்னத்திற்கு பாதிப்பில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.