செல்லியல் பார்வை | Exciting political events that unfolded on 13 October 2020 | அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்
(“அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்” என்னும் தலைப்பில் கடந்த 14 அக்டோபர் 2020-இல் செல்லியல் பார்வை காணொலி தளத்தில் இடம் பெற்ற காணொலியின் கட்டுரை வடிவம்)
மலேசிய அரசியல் வரலாற்றில் அக்டோபர் 13-ஆம் தேதி, அனைவராலும் குறித்து வைக்கப்படும் ஒரு நாளாகத் திகழும்.
அக்டோபர் 13-ஆம் தேதி காலை 11 மணி அளவில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மாமன்னரைச் சந்திப்பார் என்ற தகவல்கள் முதல் நாள் வெளிவரத் தொடங்கிய போதே இந்த நாள் அரசியல் பரபரப்புகளின் அரங்கேற்ற நாளாக மாறும் என்பதைக் கணிக்க முடிந்தது.
காலை 8.00 மணி முதற்கொண்டே அன்வாரின் வருகைக்காக பத்திரிக்கையாளர்கள் பிரம்மாண்டமான அரண்மனை வாயில்களின் முன்னால் குவியத் தொடங்கினர்.
அன்வாரின் வருகைக்கு முன்னதாக ஒரு மனிதாபிமானக் காட்சியும் அங்கே அரங்கேறியது.
அரண்மனைக்கு வெளியே காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு அரண்மனை தரப்பிலிருந்து காலை உணவு வழங்கப்பட்ட நிகழ்ச்சிதான் அது.
மக்களின் உணர்வுகளை எப்போதும் புரிந்து வைத்திருக்கும் மாமன்னர் அல் சுல்தான் ரியாதுடின் அவர்களின் மனிதநேயமிக்க செயல் இதுவாகும்.
அன்வாரின் 25 நிமிட நேர சந்திப்பு
அதைத் தொடர்ந்து காலை 10.25 மணியளவில் அன்வாரின் கார் அரண்மனையில் நுழைந்தது.
சுமார் ஒரு மணி நேரம் அன்வார் அரண்மனையில் இருந்தார்.
சந்திப்புக்குப் பின்னர் அரண்மனையில் இருந்து வெளியே வந்த அன்வார் இப்ராகிம் உடனடியாக பத்திரிக்கையாளர்களிடம் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை
பின்னர் அரண்மனை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையின்படி அன்வாரை சுமார் 25 நிமிடங்கள் மாமன்னர் சந்தித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அந்த சந்திப்பின்போது தன்னை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை அன்வார் மாமனாரிடம் சமர்ப்பித்தார். எனினும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற பட்டியலை அவர் வழங்கவில்லை. இந்த விவரங்களை அரண்மனையின் சார்பில் அடுத்த சில மணி நேரங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.
மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி அதற்கு மதிப்பளித்து அன்வார் இப்ராகிம் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாமன்னர் அவருக்கு அறிவுரை வழங்கினார் என்றும் அரண்மனை அறிக்கை குறிப்பிட்டது.
அன்வாரின் பத்திரிகையாளர் சந்திப்பு
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அன்வார் இப்ராகிமின் அடுத்த அரசியல் காட்சி அரங்கேறியது. பிற்பகல் 2 மணிக்கு தலைநகர் தங்கும் விடுதி ஒன்றில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அன்வார்.
அந்த சந்திப்பின்போது மாமன்னரிடம் 120-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கிருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களைத் தான் சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.
பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டதால் அவர் தனது பதவியிலிருந்து விலகிக் கொள்வதே கௌரவமான செயலாக இருக்கும் எனவும் அன்வார் கூறினார்.
அதேவேளையில் நான் யாரோடும் அரசியல் பகைமை பாராட்டவில்லை, அனைவரையும் இணைத்துக் கொண்டு பணியாற்றவே விரும்புகிறேன் என்றும் கூறினார் அன்வார். தன்னுடன் இணைந்து பணியாற்றவும் அடுத்த அரசாங்கத்தை கட்டமைக்கத் துணைபுரியவும் மொகிதின் யாசினுக்கு அன்வார் அறைகூவல் விடுத்தார்.
துங்கு ரசாலியைச் சந்தித்த மாமன்னர்
பத்திரிக்கையாளர் சந்திப்பை அன்வார் நடத்திக்கொண்டிருந்த அதே நேரத்தில் இன்னொரு அரசியல் காட்சி அரண்மனையில் நடந்தேறிக் கொண்டிருந்தது.
மூத்த அம்னோ தலைவரும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா மாமன்னரைச் சந்தித்த சம்பவம் தான் அது.
பிற்பகல் 2.00 மணிக்கு அரண்மனை வந்த துங்கு ரசாலி மாமன்னர் உடனான சந்திப்பை முடித்துக் கொண்டு சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்னர் அரண்மனையிலிருந்து வெளியேறினார்.
துங்கு ரசாலி அம்னோவின் ஆலோசனை வாரியத் தலைவரும் ஆவார்.
அதைத் தொடர்ந்து துங்கு ரசாலி மாமன்னரைச் சந்தித்த நிகழ்ச்சி குறித்து கருத்துரைத்தார் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி.
பத்திரிக்கைகளின் மூலமாகவே அந்த சந்திப்பு குறித்து தனக்கு தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து துங்கு ரசாலி அன்வாரை ஆதரிக்கிறாரா அல்லது அவர் அடுத்த பிரதமர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாரா?
துங்கு ரசாலிக்குப் பின்னால் சில தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிவகுத்து நிற்கின்றனரா?
என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அடுத்த சில நாட்களில் மாமன்னர் கட்சித் தலைவர்களை தனித்தனியே சந்திக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
கட்சித் தலைவர்களுடனான சந்திப்புகளை ஒத்தி வைத்த மாமன்னர்
புதன்கிழமை அக்டோபர் 14-ஆம் தேதி ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆகியோரை சந்திக்க மாமன்னர் அழைப்பு விடுத்திருக்கிறார் என முதலில் அறிவிக்கப்பட்டது. சாஹிட்டையும் மாமன்னர் சந்திப்பார் எனக் கூறப்பட்டது. எனினும் பின்னர் இந்த சந்திப்புகள் அனைத்தையும் மாமன்னர் இரத்து செய்தார்.
இதற்கிடையில் அம்னோவின் அரசியல் பிரிவு குழு அக்டோபர் 13-ஆம் தேதி இரவு தனது சந்திப்பை நடத்தியது. இந்த சந்திப்பின் முடிவில் தேசியக் கூட்டணியிலிருந்து விலகும் முடிவை அம்னோ பரிசீலிக்கும் என்ற அறிவிப்பு வெளியானது.
இந்த காட்சிகள் எல்லாம் அடுத்தடுத்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அரங்கேறிக் கொண்டிருக்க, எதுவுமே நடவாதது போல் புத்ரா ஜெயாவில் தனது இல்லத்திலிருந்து இயங்கலை வழி மாலை 5.00 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார் பிரதமர் மொகிதின் யாசின்.
கொவிட்-19 தொற்று அபாயம் காரணமாக தற்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டுள்ளார் மொகிதின்.
அன்வார் மாமன்னரைச் சந்தித்த அதே நேரத்தில் தான் இயங்கலை வழியாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும், நாட்டின் பொருளாதாரம் குறித்தும் தேசியப் பாதுகாப்புக் குழுவுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்ததாக மொகிதின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறினார்.
அன்வார் – மாமன்னர் இடையிலான சந்திப்பு குறித்து தான் கருத்துரைக்க விரும்பவில்லை என்ற மொகிதின், அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மாமன்னர் சரியான முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
இப்படியாக பல்வேறு அரசியல் சம்பவங்கள், பரபரப்பு காட்சிகளோடு அக்டோபர் 13, மலேசிய அரசியல் பயணத்தில் முக்கிய நாளாக நம்மைக் கடந்து சென்றிருக்கிறது!