கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட வேண்டும் என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் பரிந்துரைத்ததற்கு நாட்டின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம் பதிலளித்திருக்கிறார்.
நாடாளுமன்ற முடக்கம் குறித்துப் பேசியிருந்த விக்னேஸ்வரன், அரசாங்கம் பொருளாதாரத்தை சீர்படுத்தவும், அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டுவரவும் உதவும் என்று தெரிவித்திருந்தார்.
கூட்டரசு அரசியலமைப்பின் 55 (2) வது பிரிவுபடி, “மாமன்னர் நாடாளுமன்றத்தைத் தற்காலிகமாக நிறுத்தலாம் அல்லது கலைக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த கோபால் ஸ்ரீராம் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்திற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு மாமன்னருக்கு பிரதமர் அளிக்கும் எந்தவொரு ஆலோசனையும் நீதிமன்றத்தில் எதிர்க்கப்படலாம் என்று தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வழக்கிலும் இதே முடிவு பிரிட்டனில் காணப்பட்டதாக ஸ்ரீராம் கூறினார். இதில் நாடாளுமன்றத்தை முடக்க மகாராணிக்கு வழங்கப்பட்ட ஆலோசனையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
“இங்கே, நமக்கு வரையப்பட்ட அரசியலமைப்பு உள்ளது. நம் நிலைப்பாடு இங்கிலாந்தை விட வலுவானது” என்று ஸ்ரீராம் கூறினார்.
இங்கிலாந்தில், மலேசியா போன்ற எழுத்துப்பூர்வ அரசியலமைப்பு இல்லாததால் நாடாளுமன்றமே உச்சமானது என்று அவர் கூறினார்.
இதுபோன்ற வழக்குகள் சிலவற்றில் நாடாளுமன்றத்தை முடக்கும் முடிவுகள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
“எனினும் பிரதமர் அல்லது அவரது அமைச்சரவை ஒரு நியாயமான காரணத்திற்காக நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு மாமன்னருக்கு அறிவுறுத்த முடியும்” என்று ஸ்ரீராம் கூறினார்.
மேலும், நாடாளுமன்றத்தை முடக்குவது தொற்றுநோயிலிருந்து நாட்டு மீட்க உதவும் என்பதற்கு எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை என்று அவர் கூறினார்.
“காமன்வெல்த் அல்லது அமெரிக்காவில் எழுத்துபூர்வமான அரசியலமைப்பைக் கொண்ட எந்த நாடும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக தங்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தவில்லை,” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்துவதால், பொது ஒழுங்கு, பொருளாதாரம், வாழ்க்கை மற்றும் அரசியல் நிலைத்தன்மையை பேணுவதற்கு பாதுகாப்பானது என்று விக்னேஸ்வரன் கூறினார்.
“நாடாளுமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படும் போது, நாடாளுமன்றத்தின் அமர்வு நிறுத்தப்படும். மேலும் நாட்டின் விவகாரங்கள் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு தற்போதைய அரசாங்கத்தால் நடத்தப்படும். தற்போதைய அரசியல் உறுதியற்ற தன்மைக்கு மத்தியில் தற்போது இதுவே சிறந்தது” என்று அவர் கூறியிருந்தார். கொவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இப்போது பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது மோசமான முடிவாக இருக்கும் என்று அவர் எச்சரித்தார்.
முன்னாள் நீதிபதி ஸ்ரீராமின் கருத்துக்கு பதிலளித்த விக்னேஸ்வரன், ஒரு புதிய அச்சுறுத்தலுக்கு புதிய தீர்வு தேவை என்ற தனது முந்தையக் கருத்தினை மீண்டும் தற்காத்தார்.
மாமன்னரின் நிலைப்பாடுகளும் அதிகாரங்களும் இங்கிலாந்து ராணியின் அதிகாரங்களிலிருந்து வேறுபட்டவை என்பதை புரிந்து கொள்ள ஸ்ரீராம் தவறிவிட்டார் என்றும் விக்னேஸ்வரன் கூறினார். இங்கிலாந்தின் அரசியலமைப்பு அதன் அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் தனிச்சிறப்புகளையும் விவரிக்கவில்லை.
“அதேசமயம், மலேசியாவில் நம்மிடம் எழுதப்பட்ட அரசியலமைப்பு உள்ளது. இது நம் மாமன்னருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் தனிச்சிறப்புகளையும் தெளிவாக குறிப்பிடுகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான ஒரு காரணியாக கொவிட் -19- இன் நியாயத்தன்மையை ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்க நாடாளுமன்றம் தொடர்ந்தால், தவிர்க்க முடியாத அடுத்த கட்டம் பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்று அவர் கூறினார்.