Home One Line P1 செல்லியல் பார்வை : துங்கு ரசாலி – யார் இந்த ஆட்ட நாயகன்?

செல்லியல் பார்வை : துங்கு ரசாலி – யார் இந்த ஆட்ட நாயகன்?

559
0
SHARE
Ad

செல்லியல் பார்வை | Tengku Razaleigh : Who is this game-changer? | துங்கு ரசாலி : யார் இந்த ஆட்ட நாயகன்? | 19 October 2020

(செல்லியல் பார்வை காணொலி தளத்தில் நேற்று திங்கட்கிழமை அக்டோபர் 19-இல் இடம் பெற்ற “துங்கு ரசாலி : யார் இந்த ஆட்ட நாயகன்?” என்ற தலைப்பிலான காணொலியின் கட்டுரை வடிவம்)

அன்வார் இப்ராகிம் பரிந்துரைத்திருக்கும் புதிய ஆட்சி மாற்றத்தின் ஆட்ட நாயகனாக – மையப் புள்ளியாக – திடீரென உருவெடுத்திருக்கிறார் துங்கு ரசாலி ஹம்சா.

அன்வார் மாமன்னரைச் சந்தித்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் அரண்மனைக்கு அழைக்கப்பட்ட மூத்த அம்னோ தலைவர்;

#TamilSchoolmychoice

பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்த நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தை அடுத்த நாளே வெளியிட்டது;

முன்னாள் பிரதமர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியையும் மொகிதினிடம் ஏன் நிராகரித்தேன் என்ற காரணத்தை விளக்கியது;

மகாதீருடன் இணைந்து நிற்கும் சர்ச்சைக்குரிய புகைப்படம்;

இப்படியாக அடுத்தடுத்த அதிரடிகளால் அன்வாரைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ஆட்சி மாற்றத்தின் ஆட்ட நாயகனாக மாறியிருக்கிறார் துங்கு ரசாலி.

84 வயதான இந்த துங்கு ரசாலி யார் என இன்றைய இளம் தலைமுறையினர் மனங்களில் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

நீண்டதொரு அரசியல் பயணத்தைக் கொண்ட துங்கு ரசாலி கடந்து வந்த சில முக்கிய வரலாற்று சம்பவங்களை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

கிளந்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் – இளம் வயதிலேயே அரசியல் ஈடுபாடு

கிளந்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் துங்கு ரசாலி. இலண்டனில் படித்துக் கொண்டிருக்கும்போதே அரசியலிலும் பொது வாழ்விலும் ஆர்வம் காட்டினார்.

இலண்டனில் இயங்கிய மலாயா மாணவர்கள் சங்கத் தலைவராகவும் பிரிட்டனின் மலாய் சங்கத்தின் செயலாளராகவும் அவர் செயல்பட்டார்.

62 ஆம் ஆண்டில் தனது இருபத்தைந்தாவது வயதில் அம்னோ உலு கிளந்தான் தொகுதியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ஆம் ஆண்டில் பூமி புத்ராக்களின் பொருளாதார பங்கெடுப்பை உயர்த்துவதற்காக பூமிபுத்ரா வங்கி அமைக்கப்படுவதில் பங்காற்றினார் துங்கு ரசாலி. அந்த வங்கியின் முதல் நிர்வாக இயக்குனராகவும் அவர் நியமிக்கப்பட்டார் அப்போது அவருக்கு வயது 28-தான்.

இலண்டன் பெல்பாஸ்ட் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் கல்வி கற்ற துங்கு ரசாலியின் அறிவாற்றலை அறிந்துகொண்ட அப்போதைய பிரதமர் துன் ரசாக் அவரை தொடர்ந்து பல பதவிகளுக்கு நியமித்தார்.

1970 ஆம் ஆண்டில் பூமிபுத்ராக்களின் பொருளாதார நலன்களுக்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது பெர்னாஸ் (PERNAS – Perbadanan Nasional Berhad). அதன் முதல் தலைவராக பொறுப்பு வகித்தவர் துங்கு ரசாலிதான்.

மலேசியாவின் எண்ணெய் வளத்தை நிர்வகிக்க 1974 ஆண்டில் அரசாங்கம் அமைத்த நிறுவனம் பெட்ரோனாஸ். அதனைக் கட்டமைத்து, அதன் முதல் தலைவராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் துங்கு ரசாலிதான் செயல்பட்டார்.

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினராக…

1974 பொதுத்தேர்தலில்  அவர் உலு கிளந்தான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அந்தத் தொகுதி குவா மூசாங் என  பெயர் மாற்றம் கண்டது.

அப்போது முதல் இன்றுவரை அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 46 ஆண்டுகாலமாக நீடிக்கிறார் துங்கு ரசாலி. மலேசியாவில் தொடர்ச்சியாக நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் அவர்தான்.

1973-ஆம் ஆண்டிலேயே அம்னோவின் பொருளாளராக நியமிக்கப்பட்டவர் துங்கு ரசாலி.

தொடர்ந்து 1975 ஆம் ஆண்டில் அம்னோவின் மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாவதாக துன் கபார் பாபாவும், இரண்டாவதாக துங்கு ரசாலியும் மூன்றாவதாக துன் மகாதீர் முகமட்டும் அந்த ஆண்டில் உதவித் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தனது 37வது வயதிற்குள் இத்தனை சாதனைகளையும், பதவிகளையும் அடைந்தவர்தான் துங்கு ரசாலி.

துன் ரசாக்கின் மரணமும் – ஹூசேன் ஓன்னின் புதிய நியமனங்களும்…

1976-இல் நிகழ்ந்த துன் ரசாக்கின் (படம்) அகால மரணம் நாட்டில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. துங்கு ரசாலியின் அரசியல் பயணமும் திசை மாறியது.

துன் ரசாக் மறைவுக்குப் பின், அம்னோ துணைத் தலைவராக இருந்த துன் ஹூசேன் ஓன் அம்னோ தலைவராகவும் பிரதமராகவும் தேர்வானார்.

இடைக்காலத் துணைத் தலைவர் பதவிக்கு மூன்று உதவித் தலைவர்களில் ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ஹூசேன் ஓன்.

கபார் பாபா முதலாவது உதவித் தலைவர் என்றாலும் அவரை நிராகரித்தார் ஹூசேன் ஓன்.

அப்போது துங்கு ரசாலி இரண்டாவது உதவித் தலைவராக இருந்தாலும் மிக இளவயது, இன்னும் கல்யாணம் ஆகாதவர். இந்தக் காரணங்களுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ, அவரையும் நிராகரித்தார் ஹூசேன் ஓன்.

மூன்றாவதாக இருந்த மகாதீரை துணைத் தலைவராகவும் துணைப் பிரதமராகவும் நியமித்தார் ஹூசேன் ஓன்.

அந்த முடிவுகளால் அதிருப்தி அடைந்த கபார் பாபா ஹூசேன் ஓன் அமைச்சரவையிலிருந்து விலகினார்.

ஹூசேன் ஓன்னின் அபிமானத்தைப் பெற்ற துங்கு ரசாலியோ ஹூசேன் ஓன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1976 முதல் 1984 வரை அவர்தான் நாட்டின் நிதியமைச்சர்.

1981-ஆம் ஆண்டில் உடல்நலம் காரணமாக ஹூசேன் ஓன் பதவி விலகினார்.

மகாதீர் பிரதமராகவும் அம்னோ தலைவராகவும் தேர்வு பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல், தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்போம் என்றார் மகாதீர்.

1981 அம்னோ கட்சித் தேர்தலில் அப்போதைய கல்வி அமைச்சர் துன் மூசா ஹீத்தாம், (படம்) அப்போதைய நிதியமைச்சராக இருந்த துங்கு ரசாலி இருவரும் துணைத் தலைவருக்கான போட்டியில் குதித்தனர். மகாதீரோ பகிரங்கமாகவே மூசா ஹீத்தாமை ஆதரித்தார்.

இறுதியில் மூசா ஹீத்தாம் துணைத் தலைவராக வெற்றி பெற்றார். எனினும் துங்கு ரசாலி நிதியமைச்சராக மகாதீர் அமைச்சரவையில் தொடர்ந்தார். 1984-இல் துங்கு ரசாலியை அனைத்துலக வாணிப, தொழில் துறை அமைச்சராக நியமித்தார் மகாதீர். துங்கு ரசாலிக்குப் பதிலாக புதிய நிதியமைச்சராக தனது நெருங்கிய சகாவான டாயிம் சைனுடினை நியமித்தார் மகாதீர்.

மோசமடைந்த மகாதீர் – துங்கு ரசாலி மோதல்கள்

இதனால் மகாதீர்-துங்கு ரசாலி இடையிலான மோதல்கள் மோசமடைந்தன. 1987 அம்னோ தேர்தலில் மகாதீரை எதிர்த்து தலைவருக்கு போட்டியிட்டார் துங்கு ரசாலி. அந்தத் தேர்தலில் 43 வாக்குகள் வித்தியாசத்தில் மகாதீரிடம் தோல்வி அடைந்தார்.

துன் டாயிம் சைனுடின்

எனினும் அந்த தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் துங்கு ரசாலி. அதைத் தொடர்ந்து நடந்த சட்டப் போராட்டங்களால் கட்சி பிளவு கண்டது. அம்னோ பாரு என புதிய கட்சியை மகாதீர் அமைத்தார்.

துங்கு ரசாலியோ, செமாங்காட் 46 என்ற புதிய மலாய் கட்சியைத் தோற்றுவித்தார்.

அடுத்து வந்த 1990-ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய முன்னணிக்கு இணையாக அணி அமைத்து போட்டியிட்டார் துங்கு ரசாலி. பாஸ்,ஜசெக, சபாவின் பிபிஎஸ், எம்.ஜி.பண்டிதனின் ஐபிஎப் கட்சி ஆகியவை அந்தக் கூட்டணியில் இணைந்தன.

எனினும் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

தொடர்ந்து 1995 பொதுத் தேர்தலிலும் தேசிய முன்னணிக்கு எதிராக அணி அமைத்துப் போட்டியிட்டார். அதிலும் மோசமான தோல்விகளை அடைந்தார்.

அதன்பின்னர் மகாதீரோடு அரசியல் உடன்பாடு கண்டு செமாங்காட் 46 கட்சியைக் கலைத்தார் துங்கு ரசாலி. தனது அணியினரோடு மீண்டும் அம்னோவுக்குத் திரும்பினார்.

துங்கு ரசாலியின் மனைவி யார்?

இத்தனை அரசியல் போராட்டங்களுக்கு இடையிலும் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருந்தவர் துங்கு ரசாலி. 1993-இல்தான் தனது 56-வது வயதில் நூர் யுவோன் அப்துல்லா என்பவரைத் திருமணம் புரிந்தார். நூர் யுவோன் 2015-இல் காலமாகி விட்டார்.

1995 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அம்னோவுக்கு திரும்பினாலும், கட்சியில் அவரால் மீண்டும் செல்வாக்கு பெற முடியவில்லை. கட்சித் தேர்தல்களில் வெல்ல முடியவில்லை. மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளையும் அவர் ஏற்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் தொடர்கிறார்.

அம்னோவில் தலைவர்கள் மாறினாலும், தனித் தீவாகவே இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறார் துங்கு ரசாலி.

துங்கு ரசாலியை மாமன்னர் சந்தித்ததை ஊடகங்கள் மூலமாகவே அறிந்தேன் என அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி கூறியதிலிருந்து இதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

அன்வார் அரங்கேற்றத் தொடங்கியிருக்கும் ஆட்சிமாற்றத்தின் ஆட்ட நாயகனாக துங்கு ரசாலி மாறியிருந்தாலும் அதில் அவரது பங்கு என்ன என்பதில் மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன.

அன்வாரை ஆதரிக்கின்றாரா? மகாதீரை மீண்டும் பிரதமராக்க ஆதரிக்கின்றாரா? அல்லது அம்னோவை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வைக்க முயற்சி செய்கிறாரா?

அல்லது நிகழ்ந்து கொண்டிருக்கும் குழப்ப அரசியலில் தானே பிரதமராக, இறுதி முயற்சி ஒன்றை மேற்கொள்கிறாரா?

இத்தனை ஆண்டுகால அரசியல் போராட்டத்தில், தனது எண்பத்து நான்காவது வயதில் துங்கு ரசாலி அரசியலில் இன்னொரு உச்சத்தைத் தொடுவாரா?

அடுத்த சில நாட்களில் இதற்கான விடைகள் புலப்படும்!

– இரா.முத்தரசன்