Home உலகம் பாஸ்டன் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை விரைவில் நீதியின் முன் நிறுத்துவோம்- ஒபாமா

பாஸ்டன் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை விரைவில் நீதியின் முன் நிறுத்துவோம்- ஒபாமா

467
0
SHARE
Ad

obama-angryநியூ யார்க், ஏப்ரல் 16-  அமெரிக்காவின் மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இன்று சுமார் 27 ஆயிரம் பேர் பங்கேற்ற மராத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

போட்டியில் பங்கேற்றவர்கள் இறுதிக் கோட்டை நெருங்கிய வேளையில் பீரங்கி முழங்கியது போன்ற சப்தத்துடன் குண்டு வெடித்தது. தொடர்ந்து 1/2 மணி நேரத்திற்குள் ஒரு குண்டும், அப்பகுதியில் உள்ள நூலகத்தில் மற்றுமொரு குண்டும் வெடித்தன.

இதனால், மாரத்தானில் பங்கேற்றவர்கள் மூலைக்கு ஒருவராக சிதறி ஓடத் தொடங்கினார்கள். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. காயமடைந்தவர்களை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசர ஊர்தி வாகனங்கள் விரைந்து வந்தன.

#TamilSchoolmychoice

சம்பவ இடத்தை முற்றுகையிட்ட போலீசார், காயமடைந்தவர்களை அவசர ஊர்திகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 8 வயது குழந்தை உட்பட 2 பேர் பலியானதாவும் சுமார் 130 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஸ்டன் போலீசார் தெரிவித்தனர்.

இந்த குண்டுகளை ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலமாக இயக்கி வெடிக்கச் செய்திருக்கலாம் எனவும், இது தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கக் கூடும் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வரும் ஒபாமா, காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  சம்பவ இடத்தில் வெடிக்காத 2 குண்டுகளை கைப்பற்றிய போலீசார் அவற்றை செயலிழக்கச் செய்தனர்.

இச்சம்பவத்தையடுத்து, நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் அணு உலைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற சுமார் 2 மணி நேரத்திற்குள் வெள்ளை மாளிகையில் இருந்து  தொலைக்காட்சி  வாயிலாக பொதுமக்களிடையே உரையாற்றிய ஒபாமா கூறியதாவது:-

இந்த பாதக செயலை யார்? எதற்காக செய்தார்கள்? என்று இதுவரை நமக்கு தெரியவில்லை. யூகங்களுக்கு இலக்காகி விடாமல் மக்கள் அமைதி காக்க வேண்டும். பாஸ்டன் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவருக்காகவும் நாம் பிராத்தனை செய்ய வேண்டும்.

ஆனால், இச்சம்பவத்தின் அடித்தளத்தை கண்டு பிடித்து இதை யார்? எதற்காக செய்தார்கள்? என்பதை வெளிப்படுத்தி, இதற்கு காரணமானவர்களை, அவர்கள் தனிநபர்கள் என்றாலும், இயக்கம் ஆனாலும் நீதியின் முன் நிறுத்துவோம்.

பாஸ்டன் நகரம் உறுதியானது. அங்கு வாழும் மக்களும் மனஉறுதி மிக்கவர்கள். அவர்கள் ஒன்றிணைந்து தங்கள் நகரின் பெருமையை காப்பார்கள். அவர்களின் ஒற்றுமைக்கு ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் துணை நிற்பார்கள்.

பாஸ்டன் சம்பவத்தில் தீயணைப்பு துறையினர், தேசிய பாதுகாப்பு படையினர், போலீசார் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒவ்வொரு நாளும் தங்களது உயிரை ஓர் பொருட்டாக கருதாமல், ஆபத்தான சூழ்நிலையில் நாட்டு மக்களைக் காப்பாற்ற பலர் உழைத்து வருகிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு விரைவாக மீட்புப் பணியை செய்த அவர்கள் அனைவருக்கும் நாம் வீரவணக்கம் செலுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.