கோலாலம்பூர்: சபாவில் இருந்து திரும்பியவர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மீறியதாக சமூக ஊடகங்களில் கூறப்படும் கூற்றுகளை காவல் துறை விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையை புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு பிரிவு மேற்கொள்வதாக சிலாங்கூர் சிஐடி தலைவர் பாட்சில் அகமட் தெரிவித்தார்.
இந்த விஷயத்தை உறுதிப்படுத்திய கூட்டரசு சிஐடி துணை இயக்குநர் மியோர் பாரிடலத்ராஷ் வாஹிட், அக்டோபர் 5-இல் விசாரணை தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.
வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறியதற்காக அமிருடின் மீது தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 அல்லது சட்டம் 342 இன் பிரிவு 15 மற்றும் 22 (பி) இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.
“நாங்கள் இன்னும் எங்கள் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்,” என்று மியோர் கூறினார்.
அக்டோபர் 4- ஆம் தேதி, டுவிட்டரில் அமிருடின் இதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சர் கைருடின் அமான் ரசாலிக்கு பின்னர் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதற்காக விசாரிக்கப்பட வேண்டிய சமீபத்திய உயர் பதவியில் உள்ளவர்களில் அமிருடின் இணைக்கப்பட்டுள்ளார்.
ஆயினும், நேற்றைய காவல் துறை அறிக்கையின் படி, அமைச்சர் கைருடின் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகக் கூறினார். அமைச்சர் கைருடின் அமான் ரசாலி மீதான தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பில் , சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை (என்எப்ஏ) என்று வகைப்படுத்தி உள்ளதாக புக்கிட் அமான் இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் தெரிவித்திருந்தார்.
கைருடினுக்கு தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் (சட்டம் 342) கீழ் வீட்டு கண்காணிப்பு உத்தரவு (படிவம் 14 பி) வழங்கப்படவில்லை என்பதே இதற்கு காரணம் என்று அவர் விளக்கினார்.
“வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சட்டம் 342- இன் பிரிவு 15 (1)- இன் கீழ் அமைச்சருக்கு உத்தரவு வழங்கப்படவில்லை
“அந்த அறிக்கையின் அடிப்படையில், சடத்துறைத் தலைவர் அலுவலகம் அமைச்சருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. மேலும், சட்டம் 342- இன் கீழ் அக்குற்றச்சாட்டின் அடிப்படையில் வலுவான அறிக்கை எதுவும் இல்லை” என்று அவர் கூறினார்.